இது வேலமர இனத்தைச் சேர்ந்த ஒருவகை சிறுமுள் மரம். வெப்பக் காடுகளில் மிகுதியாக வளரும். ஆங்கிலத்தில் இதை ஷிகாய் என்பர். வடநாட்டில் இதற்குக் கோசி என்றும், தாவர சாத்திரத்தில் அகெசியா கொன்சின்னா என்றும் பெயர். இதை சோப்புக் கொட்டை என்றும் நம் மக்கள் கூறுவர். ஆனால் சோப்புக் கொட்டை என்பது உண்மையில் பூந்திக் கொட்டையாகும். என்பது தாவர சாத்திரத்தில் பூந்திக் கொட்டைக்குப் பெயர்.சீயக்காயில் சாபொனின் என்ற சத்து 5 சதவீதம் அடங்கி இருக்கிறது. இதுதான் எண்ணெயைப் போக்கவும் தோலைப் பற்றியுள்ள அழுக்கை அகற்றவும் உதவுகிறது.
இந்தச் சீயக்காயைக் கீழ்க்காணும் விதம் வாசனைச் சீயக்காய்த் தூளாக மாற்றிக் கொள்ளலாம்.
செய்முறை:முதலில் சீயக்காய் ஒரு பங்கு வெந்தயம் ஒரு பங்கு ஒன்றாகக் கலந்து இயந்திர உதவியால் மாவாக அரைத்துக் கொள்ளவும். இதில் வாசனைக்காக உலர்ந்த எலுமிச்சம் பழத்தோல், ஆரஞ்சுத்தோல், கோரைக் கிழங்;கு, கிச்சிலிக் கிழங்கு ஆகியவற்றைச் சம அளவாக இடித்துச் சேர்க்கவும். இவற்றை இயந்திரத்தில் கொடுத்து அரைத்தால் அவற்றின் இயல்பான மணம் கெட்டுப் போகும். நான்கு கரண்டி சீயக்காய்த்தூள், ஒரு பங்கு இந்த வாசனைத் தூளைக் கலந்து கொண்டால் போதுமானது. கோரைக்கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு ஆகிய இரண்டும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சோப்பை விட இந்தத் தூள் உடலில் தேய்த்துக் குளிப்பதற்குச் சிறந்தது. நல்ல மணமாகவும் இருக்கும்.