தலைமுடி சிகிச்சை

ஆண்களே! உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை முடி கொட்டுவது. முடி கொட்டுவதால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்களின் முடி கொட்டுகிறது என்று நினைத்தே பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்.

முடி கொட்டுகிறது என்றால் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயலாமல், உடனே வருத்தப்பட ஆரம்பித்து, புலம்பித் தள்ளுவார்கள். முதலில் எந்த ஒரு பிரச்சனை வருவதற்கும் முக்கிய காரணம் நாம் தான். அதிலும் நாம் மேற்கொள்ளும் பழக்கம் தான் முதன்மையான காரணம். அதைத் தெரிந்து மாற்றங்களைக் கொண்டு வந்தால், அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சரி, இப்போது முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு உங்கள் தவறைத் திருத்திக் கொண்டு, உங்கள் முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக சீப்பைப் பயன்படுத்துவது

சில ஆண்கள் அளவுக்கு அதிகமாக சீப்பைப் பயன்படுத்துவார்கள். சீப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், முடி பாதிப்பிற்கு உள்ளாகி உதிர ஆரம்பிக்கும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறைக்கு மேல் சீப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமெனில் உங்கள் விரலால் உங்கள் தலைமுடியை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.

பரம்பரை

உங்கள் பரம்பரையில் தாத்தா, அப்பாவிற்கு வழுக்கை இருந்தால், உங்களுக்கும் கண்டிப்பாக வழுக்கை வரும். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் ஜீன்கள் தான். இதை எவராலும் மாற்ற முடியாது. ஆனால் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், வழுக்கை ஏற்படுவதை சற்று தாமதமாக்கலாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலே, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கும். அதிலும் நீங்கள் முடி கொட்டுகிறது என்று நினைத்து அதிகம் வருந்தினால், அது மேன்மேலும் முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே முடி கொட்டினால் வருந்துவதைத் தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, மனதை அமைதிப்படுத்தினால், தானாக முடி கொட்டுவது நின்றுவிடும்.

போர் தண்ணீர்

தற்போது நிறைய வீடுகளில் போர் தண்ணீர் உள்ளது. போர் தண்ணீரில் உள்ள தாதுப் பொருட்கள், முடி மற்றும் ஸ்கால்ப்பில் ஓர் படலத்தை உருவாக்கி, மயிர்கால்களுக்கு போதிய எண்ணெய் பசை கிடைக்காமல் செய்து, ஸ்கால்ப்பில் வறட்சியை அதிகரித்து, பொடுகை உருவாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே போர் தண்ணீரினால் முடிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

மருந்துகள்

நாம் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு ஏதாவது ஒரு மாத்திரைகளை எடுத்து வருவோம். அது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அப்படி எடுத்து வரும் மருந்து மாத்திரைகளால் கூட முடி கொட்ட ஆரம்பிக்கும்.

திடீர் எடை குறைவு

உங்களுக்கு திடீரென்று உடல் எடைக் குறைந்தால், முடி கொட்ட ஆரம்பிக்கும். இந்த உடல் எடை குறைவிற்கு உடலில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான அழுத்தம் அல்லது வைட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள் கூட காரணமாக இருக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். நிச்சயம் உங்கள் முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

தொற்றுகள்

சருமம் மற்றும் ஸ்கால்ப்பை அதிகம் தாக்கும் தொற்று தான் படர்தாமரை. இந்த படர்தாமரை சுத்தமில்லாமையால் வரும். அதிலும் இது ஸ்கால்ப்பைத் தாக்கினால், முடி உதிர்தலை அதிகரித்து, நாளடைவில் வழுக்கைக்கு கூட வழிவகுக்கும். எனவே தலையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹேர் ஸ்டைலிங் பொருட்கள்

சில ஆண்கள் தங்களின் முடியை ஸ்டைலாக்குகின்றேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், கலரிங், ப்ளீச்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்தினால், அதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முடி உதிர ஆரம்பிக்கும். எனவே கண்ட பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

14 1444802573 2 baldhead

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button