உடல் எடையைக் குறைக்க, சிலர் ஜிம்முக்கு செல்வார்கள், சிலரோ, உடல் எடையைக் கூட்டுவதற்கு பயிற்சிகள் மேற்கொள்வார்கள். எதற்காகப் பயிற்சி செய்தாலும் சமச்சீரான உணவு எடுத்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியமான விஷயம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும், உடற்பயிற்சியின்போது ஏதேனும் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. சிலர் வாயைக்கட்டி உடற்பயிற்சி செய்வார்கள். அதனால் உடல் சோர்ந்துபோய், செய்த பயிற்சிகள் வீணாகிவிடும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு, செய்த பின்பு கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்பற்றி ஊட்டச் சத்து நிபுணர் பவானி பட்டியலிடுகிறார்.
பயிற்சிக்கு முன் (ப்ரீ வொர்க் அவுட்)
வெறும் வயிற்றுடன் பயிற்சிகளைத் தொடங்கக்கூடாது. பயிற்சி செய்யும்போது அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடலுக்கு அதிக சக்தி தேவை. வெறும் வயிற்றில் பயிற்சிகள் செய்யும்போது உடல் மிகவும் சோர்வடைந்து தலைசுற்றல் போன்றப் பிரச்னைகள் வரலாம். அதனால் (பயிற்சி தொடங்குவதற்கு முன்பு) பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து இருக்கிறது. பயிற்சி செய்யும்போது முழுக்க முழுக்கத் தெம்பாக இருக்கும். சோர்வு ஏற்படாது.
நாம் சாப்பிடும் உணவு மெதுவாக செரிமானம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். இத்தகைய உணவை காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் என்போம். இந்த உணவின் சிறப்பே, நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை நிலைத்திருக்கவைப்பதுதான்.
பயிற்சியின்போது…
உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் சக்தியை முடிந்த அளவு எரிக்கிறோம். கையிருப்பில் உள்ளவற்றை செலவு செய்துவிட்டால், அதன் பின் கஜானா காலியாகிவிடுமே. இதை எதிர்கொள்ள உடலில் உடனே போய்ச்சேர்ந்துவிடக் கூடிய சத்தான உணவு தேவை. அதேபோல மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் அருந்தலாம். தண்ணீரைத் தவிர இளநீர் அருந்தலாம். இதில் பொட்டாஷியம் இருப்பதால், தசைகள் சோர்வடையாமல் இருக்க உதவும். பயிற்சியை உற்சாகமாகச் செய்து முடிக்கலாம். தசைகள் வலிக்காது. கையைத் தூக்க முடியவில்லை, சுளுக்கு வந்துவிட்டது என்று சொல்லாமல், இலகுவாக செய்ய முடியும். கடுமையானப் பயிற்சி செய்பவர்கள் எனர்ஜி ட்ரிங் அல்லது எனர்ஜி பார் சாப்பிடலாம். இதில் எலக்ட்ரோலைட், சோடியம் பொட்டாஷியம் இருப்பதால், சக்தியைத் தக்கவைக்க உதவும். தசைகள் எளிதாகப் பழைய நிலைக்குத் திரும்பும். தண்ணீரோ, இளநீரோ, எனர்ஜி பானமோ, எனர்ஜி பாரோ… எதுவாக இருந்தாலும் இடையில் சாப்பிட்டுக்கொள்ளலாம். அது, புது வேகத்தையும் உற்சாகத்தையும் உடலுக்குத் தரும். பயிற்சியின் நடுவில் பழச்சாறு அருந்தக் கூடாது. அது மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடும்.
பயிற்சிக்குப் பின்
பயிற்சி செய்த பின், நிறைய கலோரிகள் எரிக்கப்பட்டு இருக்கும். எனவே வொர்க் அவுட் செய்த பிறகு அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்பார்கள். இந்த நேரத்தில் சரியான சத்தான உணவு சாப்பிட்டால், அது நம் உடலில் உள்ள தசைகளைப் பாதிக்காமல் பாதுகாக்கும். தசைகளில் உள்ள இறுக்கத்தைப் போக்கி, பழையபடி தசைகள் இலகுவாக, இயல்பு நிலைக்குத் திரும்ப புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். மோர் அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். ஸ்மூதி எனப்படும் பழக் கூழை அருந்தலாம். வாழைப் பழம், பப்பாளி அல்லது ஆப்பிள் இதில் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக்கொள்ளவு. அதில் கொஞ்சம் தயிரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதன் பின் மிக்ஸியில்போட்டு அரைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி கூழாக்கவேண்டும். இது ருசியாக மட்டுமில்லாமல் சத்தானதாகவும் இருக்கும்.