பலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இதற்கு காரணம் வெயில் தான். வெயிலில் அதிகம் சுற்றும் போது, ஒரே இடத்தில் சூரியக்கதிர்கள் அதிகம் படுவதால், அவ்விடம் கருமையாகும். நாம் முகத்திற்கு தினமும் பராமரிப்பு கொடுப்பதால், முகம் அதிகம் கருமையாவதில்லை. ஆனால் கைகளை பலரும் கண்டு கொள்வதில்லை.
அதனால் தான் பலருக்கும் கைகள் மட்டும் சற்று கருமையாக இருக்கிறது. மேலும் இந்த கருமையைப் போக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச்சிங் மற்றும் இதர சரும சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் அவை தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல. அதுவே இயற்கைப் பொருட்களைக் கொண்டு கைகளைப் பராமரித்தால், கருமை நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
தயிர்
தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம்.
தக்காளி
தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.
பாதாம்
பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.
பப்பாளி
பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.