25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
cool drinks
பழரச வகைகள்

வீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்!

வெயில் காலத்தில் வீட்டில் நுழைந்து உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே குளுமையான, சுவையான ஒரு டம்ளர் பானம் கையில் கிடைத்தால், கொண்டாட்டம்தான்! அந்தப் பானத்தில் சத்தும் நிறைந்திருந்தால், `டபுள் தமக்கா’தானே! இந்த ஆனந்தம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வேண்டுமா? வகைவகையான குளிர்பானங்களை எப்படி செய்வது என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

தண்டாய்

தேவையானவை: பாதாம் – 10, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, மிளகு – 10, சர்க்கரை – அரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பன்னீர் ரோஜா – 2 (இதழ்களை எடுத்துக்கொள்ளவும்), காய்ச்சி, ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் – அரை லிட்டர்.

செய்முறை: பாதாமை சூடான நீரில் ஊறவைத்து எடுத்து, தோலுரித்து, மையாக அரைக்கவும். மிளகைப் பொடிக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து ஒரு கம்பி பதத்தில் பாகு வரும்போது, அரைத்த பாதாம் சேர்த்து கலந்துவிடவும். பொடித்த மிளகு, மஞ்சள்தூள், குங்குமப்பூ, 4 இதழ்கள் தவிர மீதமுள்ள ரோஜா இதழ்கள் சேர்த்து, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவிடவும். நன்கு ஆறியபின், குளிர்ந்த பால் சேர்த்துக் கலந்து மேலாக ரோஜா இதழ்களால் அலங்கரித்து, `ஜில்’லென பரிமாறவும்.

வடஇந்தியாவில் பிரபலமான பானம் இது.

பன்னா

தேவையானவை: புளிப்பில்லாத மாங்காய் – 2, சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன், கொரகொரப்பாக பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய்களைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு, இறக்கி ஆறவைத்து தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும் (கொட்டையை நீக்கி விடவும்). இத்துடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்லென பரிமாறவும்.

நன்னாரி சர்பத்

தேவையானவை: நன்னாரி வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், சர்க்கரை – ஒரு கப், எலுமிச்சைப் பழம் – 2, சிவப்பு ஃபுட் கலர் – 2 சிட்டிகை.

செய்முறை: நன்னாரி வேரை, தண்ணீரில் கழுவி எடுத்து, பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைக்கவும்.

சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி, இத்துடன் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது, இந்த ஜூஸை கால் கப் எடுத்து முக்கால் கப் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது, கூடுதல் சுவை தரும்.

ஹெர்பல் காக்டெய்ல்

தேவையானவை: எலுமிச்சை இலைகள் – ஒரு கப், அருகம்புல் – ஒரு கப், இளம் சிவப்பாக உள்ள மா இலை – 10, துளசி இலை – ஒரு கப், எலுமிச்சைப் பழம் – 2, சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: எலுமிச்சை இலைகள், அருகம்புல், மா இலைகள், துளசி இலைகள் இவற்றை நன்கு சுத்தம் செய்து, பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவைக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும். தளதளவென கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும்.

கொதிக்கவைத்த ஹெர்பல் கலவையை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். இதனுடன் வெல்லக் கரைசல் சேர்க்கவும். சுக்குப்பொடி, எலுமிச்சைச் சாறு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை தோல் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இதைப் பானையில் ஊற்றிவைத்து, குளிர்ந்ததும் அருந்தினால், கூடுதல் மணம், சுவையுடன் இருக்கும். எலுமிச்சைச் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் சேர்க்கப்படுகிறது. தேவையில்லை என்பவர்கள் தவிர்க்கலாம்.

தேங்காய் டிலைட்

தேவையானவை: கெட்டி தேங்காய்ப்பால் – அரை கப், இளநீர் – அரை கப், தேன் – 2 டீஸ்பூன், வறுத்து, அரைத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், இளநீருடன் வரும் வழுக்கை தேங்காய் – 2 டீஸ்பூன், ஐஸ் துண்டுகள் – 4.

செய்முறை: கெட்டி தேங்காய்ப்பால், இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் துண்டுகளை சேர்த்து, மிக்ஸியில் நுரை வர அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, இளநீர் வழுக்கையை மேலாக சேர்த்துப் பரிமாறவும்.

தேனும், இளநீரும் உடலுக்கு உடனடியாக சக்தி தரக்கூடியவை.

ராகி கூழ்

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு – அரை கப், கடைந்த மோர் – 2 கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, வெள்ளரிக்காய் துருவல் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். தளதளவென கொதிக்கும்போது, உப்பு, ராகி மாவு சேர்த்து மாவு வேகும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.

ராகி உருண்டைகளைத் தண்ணீரில் இருந்து எடுத்து கைகளால் கரைக்கவும். இத்துடன் அரைத்த பச்சை மிளகாய் கலவை, சீரகத்தூள், கடைந்த மோர், தேவையான உப்பு, துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு கலந்து, ராகி உருண்டைகளை ஊறவைத்த தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துப் பரிமாறவும்.

உடலுக்கு குளிர்ச்சி, வயிற்றுக்கு இதம் கொடுக்கும் இந்த ராகி கூழ். நீண்ட நேரம் பசி தாங்க உதவும்.

வெஜிடபிள் சால்ட் லஸ்ஸி

தேவையானவை: நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு – , வெள்ளரிக்காய் – தலா ஒரு கப், நறுக்கிய கேரட் – அரை கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்), கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, கெட்டித் தயிர் – ஒரு கப், ஐஸ் துண்டுகள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை வடிகட்டி எடுத்து வைக்கவும் (காய்களை வீணாக்காமல் கூட்டு, சூப் போன்றவற்றில் சேர்க்கலாம்). இஞ்சி, கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வடிகட்டிய காய்கறி நீருடன் சீரகத்தூள், பெருங்காயத்தூள், அரைத்த இஞ்சிக் கலவை, தயிர், தேவையான உப்பு, ஐஸ் துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் அடித்து, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

வெயிலினால் வரும் வியர்வை காரணமாக தாது உப்புக்கள் வெளியேறுவதை சரிசெய்து, சோர்வை விரட்டும் இந்த லஸ்ஸி.cool drinks

Related posts

இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

nathan

வாழைத்தண்டு மோர்

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

nathan

ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்….

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

nathan

அரேபியன் டிலைட்

nathan

தேவையான பொருட்கள்:

nathan