வைத்தியம்
இனி வரும் நாட்களில் கோடையின் வெம்மை நம்மை கடுமையாக தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அதற்கு முன்னதாக நம்மை தற்காத்துக்கொள்வது பற்றி தெரிந்துகொள்வோம். தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து நீர்மோருடன் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெயிலினால் ஏற்படும் களைப்பு, சோர்வு நீங்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை, கசகசாவை மையாக அரைத்து கொதிக்க வைத்த பால், சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், உஷ்ண நோய்கள் நம்மை நெருங்காது. மோருடன் சிறிது வெந்தயம் சேர்த்து முதல்நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் குடித்து வந்தால் உடல்சூடு குறையும். அத்துடன் வெயிலினால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். எலுமிச்சைச் சாறுடன் மோர் சேர்த்து வெங்காயச்சாறு, பெருங்காயம், உப்பு சேர்த்து குடித்து வந்தால் வெயிலினால் ஏற்படும் அசதி, சூடு குறையும்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயிலை சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல்சூடு குறையும். இவை தவிர, கோடை வரவுகளான வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, நுங்கு போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அம்மை, கண் நோய், வயிற்று வலி, மூத்திரக்கடுப்பு போன்ற நோய்கள் நம்மை தாக்காது.