ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பீர்கள், திடீரென உங்களுக்கே தெரியாமல் ஏதோ நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்று உணர்ந்து விழுந்தடித்து உறக்கத்தில் இருந்து எழுந்திரு உட்கார்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பீர்கள்.
கண்டிப்பாக அனைவரும் இதை உணர்ந்திருப்போம். ஆனால், இது ஏன் உண்டாகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நமது மூளை, கனவுக்கு இடையேயான ஹார்மோன் இணைப்பில் ஏற்படும் தாக்கத்தினால் தான் இது உருவாகிறது.
ஹைப்நிக் ஜர்க்
உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் தொல்லைகளை தான் ஹைப்நிக் ஜர்க் (Hypnic Jerk) என குறிப்பிடுகிறார்கள். இதை Hypnagogic jerk அல்லது Sleep Start என்றும் கூட கூறுகிறார்கள்.
காரணம்
இதற்கான காரணம் இதுதான் என இன்று வரை யாரும் ஊர்ஜிதமாக கூறியதில்லை என உளவியலாளர் டாம் ஸ்டாஃபோர்ட் கூறுகிறார். மேலும், “உறக்கத்தில் இருந்து எழும் நிலை மற்றும் கனவு நிலைகளுக்கு மத்தியில் உண்டாகும் கூரான போருக்கு மத்தியில் ஏற்படும் தாக்கம் என இதை கூறலாம்” என்றும் டாம் கூறியுள்ளார்.
மூளை மற்றும் உடல்
நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உடல் பாரளைஸ் நிலைக்கு சென்றுவிடும். அப்போது ஆர்.ஈ.எம் எனப்படும் Rapid Eye Movement-க்குள் நீங்கள் செல்லும் போது தான் கனவுகள் தோன்றுகின்றன.
இந்த ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும் உடல் மூளையை தாண்டி செயல்படும் போது நீங்கள் திடீரென விழுவது போன்ற உணர்வுடன் எழுவது அல்லது உங்களுக்கே தெரியாமல் திடீரென விழிப்பது போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன.
தசை இழுப்பு
நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உங்கள் தசைகளில் இழுப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் “myoclonus” என கூறுகிறார்கள். விக்கல் வருவது கூட இந்த வகையை சேர்ந்தது தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மர்மம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு இன்று வரையும் தெளிவான, முழுமையான விடை கிடைக்காத மர்மமாக தான் இருக்கிறது. இதை சார்ந்து நிறைய தியரிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டாம் ஸ்டாஃபோர்ட் , பிரடெரிக் கூலிட்ஜ்
டாம் ஸ்டாஃபோர்ட் இதை எழும் நிலை கனவுக்கு மத்தியிலான தாக்கத்தில் உண்டாகும் வெளிபாடு என கூறுவது போல, பிரடெரிக் கூலிட்ஜ், ஆழ்ந்த உறக்கத்தின் போது பாரளைஸ் ஆகியிருக்கும் தசைகளில் உண்டாகும் ரிலாக்ஸினால் கூட இது உண்டாகலாம் என கூறுகிறார்.
ஆய்வாரள்கள் இது குறித்து பல கருத்துகள் கூறினும். இது மிகவும் இயல்பானது, எந்த கொடிய விளைவும் அற்றது என கூறுகின்றனர். மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் ஹைப்நிக் ஜர்க்கிற்கும் அதிகரிக்கும் இதயத்துடிப்பு, மூச்சு, வியர்வை போன்றவைக்கும் தொடர்புடையதாக இருக்கிறது என கூறுகின்றனர்.
காரணிகள்
அதிகமாக காஃபைன், நிக்கோட்டின் உட்கொள்வோர், வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வோர், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பதட்டம்
பதட்டம் மற்றும் உறக்கமின்மை தான் இதற்கான முக்கிய / அதிகப்படியான காரணியாக இருக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடிக்கடி இப்படி ஏற்பட்டால் உங்களுக்கு பதட்டம், மன அழுத்தம் நிறைய இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது என்று அர்த்தம்.
உறக்கம்
அதிகப்படியான வேலை, வேலை பளு, மன அழுத்தம் இருந்தால் நள்ளிரவு வரை வேலை செய்வதை தவிர்த்து, முதலில் நன்கு உறங்குங்கள். நல்ல உறக்கமே இதற்கான நற்மருந்தாகும்.