28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht4372
மருத்துவ குறிப்பு

ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

மது… மயக்கம் என்ன?
நண்பர்களும் ஒயினும் பழமையானதாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.

ஆனால்…ஹாலிவுட் நடிகை கேமரான் டயஸ் முதல் கோலிவுட் நடிகை நயன்தாரா வரை, முகப்பொலிவுக்காக ரெட் ஒயின் அருந்துகிறார்கள் என்பது சினிமா கிசுகிசு! இருக்கட்டும்… ரெட் ஒயின் அருந்தினால் உண்மையிலேயே முகம் பொலிவு பெறுமா? பருக்கள் வராமல் ஓடிப் போகுமா?

வாஷிங்டன் மாகாணப் பல்கலைக்கழகம் கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் லேட்டஸ்ட் ஆய்வு அப்படித்தான் சொல்கிறது. திராட்சை, பெர்ரி, ரெட் ஒயின் ஆகியவற்றில் Resveratrol என்கிற ஆன்ட்டி ஆக்சிடன்ட் காணப்படுகிறது. இதற்கு பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் உண்டு. ஹெல்த்தி ஆன்ட்டி ஆக்சிடன்ட் என்று புகழப்படும் ரெஸ்வெரட்ரோல், செல் மற்றும் திசுக்கள் பாதிப்பு அடைவதையும் தடுக்குமாம்.

அலோபதி மருத்துவத்தில் பருக்களைப் போக்க அளிக்கப்படும் Benzoyl peroxide மருந்தின் திறனை அதிகரிக்கவும், நீடித்துச் செயல்படச் செய்யவும் கூட இது உதவுகிறதாம். பென்சாயில் பெராக்சைடு மருந்தின் வீரியம் பொதுவாக 24 மணி நேரங்களுக்கே காணப்படும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட் அதற்குத் துணைபுரிவதால், தொடர்ச்சியாக பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையைப் பெற முடிகிறது.

இதனால் பாக்டீரியாக்கள் பெருகாமல் தடுக்கப்படுகிறது. Journal Dermatology and Therapy என்கிற மருத்துவ ஆய்வு இதழும் இது பற்றிய விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.இதோடு விட்டால் பரவாயில்லை… இந்த ரெஸ்வெரட்ரோல் ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன் போல… நம்முடைய ஊளைச் சதையையும் கலோரியை எரிக்கச் செய்யும் பிரவுன் ஃபேட் ஆக மாற்றிவிடுமாம். கொழுப்பு செல்கள் வளர விடாமலும் தடுக்குமாம்.தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கேன்சர் ஏற்படாமல் தடுக்குமாம். கேன்சர் உருவாக்க வாய்ப்புள்ள பாதிப்புக்கு ஆளான செல்களை இதுவே கொன்றுவிடுமாம்.

இவை மட்டுமல்ல… ரெட் ஒயின் அருந்திவிட்டுப் படுத்தால் மூட்டைப்பூச்சி கூட உங்களைக் கடிக்காது என்கிறார்கள்!மூப்பு காரணமாக ஏற்படும் மறதி பிரச்னைகளையும் ரெட் ஒயினில் உள்ள சமாசாரங்கள் தவிர்க்க உதவுமாம். டெக்சாஸ் மருத்துவ விஞ்ஞானிகள் எலி பரிசோதனை செய்த போது, இது நிரூபணம் ஆகியிருக்கிறது. ரெஸ்வெரட்ரோல் காரணமாக அவற்றின் கற்றல், நினைவாற்றல், மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாம்.

இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் வகையிலான ஒருவித வீக்கத்தை ஏற்படுத்தும் மூலக்கூறுகளையும் ரெஸ்வெரட்ரோல் கட்டுப்படுத்துகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.சரி… இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே… இன்றே தொடங்குவோம் ஒயின் குடிப்போர் சங்கத்தை என யோசிக்கிறீர்களா?
ஒரு நிமிடம் நில்லுங்கள் ராஜாவே! ஒயின் ஆனது பின்வருவனவற்றையும் செய்யும்.

1. தசைகள் குணமாவதையும் தடை செய்யும்!

மூப்பு தோற்றம் விரைவாக ஏற்படுவதைத் தடுக்கும் திறனும், செல்களை மறு உருவாக்கம் செய்யும் குணமும் ரெஸ்வெரட்ரோலுக்கு இருந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். தசைகள் சேதம் அடையாமல் ஒரு கட்டம் வரை பார்த்துக்கொள்ளும்தான். ஆனால், டோசேஜ் அதிகம் ஆகும் போது, அந்தப் பழுது பார்க்கும் சங்கிலியையே உடைத்து விடும். சரியான அளவு என்பதை எப்படித் தீர்மானிப்பீர்கள்?

2. சில வகை கேன்சர்களை ஏற்படுத்தவும் கூடும்!

சில வகை கேன்சர்களை ரெட் ஒயின் தடுக்கும் எனக் கூறப்பட்டாலும், Alcohol and Alcoholism ஆய்வு இதழ் அடுத்த அதிர்ச்சியை அள்ளி அளிக்கிறது. வேறு சில கேன்சர்களை உண்டாக்கும் தன்மை ரெஸ்வெரட்ரோலுக்கு உண்டாம். குறிப்பாக மார்பக கேன்சர்!

3. குடிகாரர் ஆக 95 சதவிகித சாத்தியம்!

அழகுக்காக, மருத்துவத்துக்காக, ஹெல்த்தியாக வாழ்வதற்காக என ஏதேதோ காரணங்களுக்காக நாம் தினம் தினம் பருகுவது ரெட் ஒயினே என்றாலும் கூட, அது ஒருகட்டத்தில் பருகுபவரை போதை அடிமையாக்கி விடும். இதற்கு 95 சதவிகிதம் வரை சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

4. ஒயின் எல்லாம் ஒயினே அல்ல!

பாரம்பரியமாகவும் முறை தவறாமலும் தயாரிக்கப்படும் மேலைநாட்டு ஒயின்களில் வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட ஆன்ட்டிஆக்சிடன்ட்டுகள் இருக்கக்கூடும். பயன் தரவும் கூடும். நம் ஊரில் ரெட் ஒயின் என்ற பெயரில் விற்கப்படுகிற அயிட்டங்கள் உண்மையில் ஒயினே அல்ல. ஒயின் என்பதற்கான இலக்கணம், இலக்கியம் எல்லாவற்றையும் எகத்தாளம் செய்து சும்மா காய்ச்சி வடிகட்டப்பட்ட இனிப்புத் திரவங்களே அவை. ஆகவே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள். நயன்தாரா பருகுவதாகச் சொல்லப்படுகிற குறிப்பிட்ட இறக்குமதி ஒயினின் விலை பாட்டில் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய். இப்போது புரிந்திருக்குமே! அப்படியானால் என்னதான் செய்வது?திராட்சைப்பழம் சாப்பிடலாம்… தப்பே இல்லை!
ht4372

Related posts

கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

பற்களின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

35 வயதை கடந்துவிட்டால் உடல்நலனில் அக்கறை தேவை

nathan

தெரிஞ்சிக்கங்க…வைட்டமின்-D குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் யாவை?

nathan

உங்களுக்கு தெரியுமா பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

nathan

மதுவும் மீளமுடியாத மயக்கமும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டுமென கூறுவார்கள் தெரியுமா?

nathan

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ

nathan

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

nathan