திக்குவாய் அகல…
குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் குணமாக வேண்டும் எனில், விளக்குத் தீயில் சுட்ட வசம்பைத் தாய்ப்பால் விட்டு அரைத்து அந்தப் பசையை சிறிதளவு நாக்கில் தடவிவர வேண்டும்.
வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்த…
வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுட்ட வசம்புச் சாம்பலை சிறிதளவு எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி உணர்வு நன்கு கட்டுப்படும்.
இருமலைக் குணப்படுத்த…
வசம்பு சிறிதளவும் அதிமதுர வேர் சிறிதளவும் எடுத்துக்கொண்டு இரண்டையும் குடிநீரில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு காய்ச்சிய பின் வடிகட்டி எடுத்துக்கொண்டு ஆறவைக்க வேண்டும். வெதுவெதுப்பான நிலையில் உள்ள அந்தக் குடிநீரைக் குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்துவந்தால், இருமல், ஈளை, வயிற்று வலி மற்றும் ஜுரமும் குணமாகும்.
அஜீரணம் அகல…
அரை லிட்டர் அளவுத் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அந்த வெந்நீரில், 50 கிராம் அளவு வசம்பைக் கொட்டி பாத்திரத்தை இறக்கிவைத்துவிட வேண்டும். வசம்பு நன்றாக ஊறிய பின் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய வசம்பு நீரில், 15 முதல் 30 மில்லி கிராம் அளவை உள்ளுக்குள் குடிக்க வேண்டும். பசியின்மை, அஜீரணம், வயிற்றுப் பொருமல் போன்றவை இதனால் குணமாகும்.
கீழ்வாத நோய்க்கு…
கீழ்வாத நோயால் நெடுநாள் அவதிப்படுவோர் காசுக் கட்டியுடன் வசம்பைச் சேர்த்து நீர் விட்டு அரைத்து அந்தப் பசையை மேல் பூச்சாக பற்றுப்போட்டு வந்தால் குணம் பெறலாம்.
நீண்ட நாட்களுக்கு அதிக அளவில், வசம்பை உட்கொண்டு வந்தால் வயிற்றுக் குமட்டலையும் கடுமையான வாந்தியையும் தூண்டும் இயல்பு உடையது. எனவே, எச்சரிக்கையோடு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே வசம்பைப் பயன்படுத்திக்கொள்வது நலம்.