மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மாம்பழத்துக்கே முதலிடம். நாவில் நீர் ஊறவைக்கும் சுவையுடன், அதிக அளவு சத்துக்களையும் கொண்டது. கண்ணைக் கவரும் மஞ்சள் நிறத்தில் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மாம்பழங்களைப் பார்த்ததும் வாங்கிச் சாப்பிட ஆசைத் தூண்டும். ஆனால், சமீபகாலமாக, மாம்பழங்களை கார்பைடு கற்கள், ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டு பலரது உயிருக்கே உலைவைத்துவிட்டன என்ற அதிர்ச்சிச் செய்திகள் மாம்பழவிரும்பிகளை நடுங்கவைக்கிறது. செயற்கையாகப் பழுக்கவைக்கும் பழத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சரியான பழங்களைத் தேர்ந்தெடுப்பதுபற்றியும் விரிவாகச் சொன்னார் மதுரையைச் சேர்ந்த டாக்டர் நளினி அருள்.
”இயற்கையான முறையில் பழங்கள் பழுத்ததும், மரத்திலிருந்து பறித்து விற்பனைக்கு வந்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், அவசரப்பட்டு, காயாக இருக்கும்போதே செயற்கை முறையில் பழுக்கவைத்து விற்பனை செய்வதால்தான் பிரச்னையே.
கார்பைடு கற்களைப் பழங்களின் நடுவே வைத்தோ அல்லது ரசாயனங்கள் மூலமாகவோ மாம்பழத்தைப் பழுக்கச் செய்யும்போது பழத்தில் உள்ள இயற்கைச் சத்துக்கள் அழிந்துபோய், கிட்டத்தட்ட விஷமாகவே மாறிவிடும்.
கடந்த வருடம் மாம்பழங்களைச் செயற்கையான முறையில் பழுக்க வைக்க, ‘எத்லீன்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதைக் கண்டுபிடித்து உடனடியாக அரசு அதைத் தடை செய்தது. எத்லீன் என்ற ரசாயனம் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடியது. இதனால், கண்கள், சருமம், நுரையீரல், நினைவுத்திறன் ஆகியவை பாதிக்கப்படுவதோடு, தொடர்ந்து இத்தகைய ரசாயனம் பயன்படுத்தப்பட்ட பழங்களைச் சாப்பிட்டவர்களுக்கு, சுவாசப் பிரச்னைகளும் ஏற்பட்டன. ஆனால், தற்போது ஈதேன், கால்சியம் கார்பைடு, எதிபான், பெதிலீன் போன்ற ரசாயனங்கள் மாம்பழங்களை விரைவில் பழுக்கவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் வேதனை” என்ற டாக்டர் நளினி, அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சொன்னார்.
” ‘பெதிலீன்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி அதிகமாக மாம்பழத்தை செயற்கையாகப் பழுக்க வைக்கின்றனர். எத்லீன் அளவுக்கு பெதிலீன் உடல் நோய்களை ஏற்படுத்தாது என்றாலும், மாம்பழத்தின் இயற்கை ருசியையே மாற்றிவிடும். அதில் உள்ள சத்துகளையும் அழித்துவிடும். இந்த அளவு மட்டுமே பயன்படுத்தலாம் என்று பெதிலீனைப் பயன்படுத்துவதற்கு வரம்புகள் உண்டு. ஆனால், வியாபாரிகள் பெதிலீனைப் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்துக்குரிய விஷயம்.
மாம்பழங்களை வாங்கும்போது அதிகக் கவனம் தேவை. செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் மாம்பழத்தின் வாசனை இருக்காது. நுகர்ந்து பார்த்து வாங்குங்கள்.
அதிகமான பளபளப்புடன், தோல் சுருக்கம் எதுவும் இன்றி இருக்கும் மாம்பழங்களை வாங்க வேண்டாம்.
மாம்பழத்துக்கே உரிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், உட்பகுதி பச்சைத் திட்டுகளுடன் இருக்கும். சாறு அதிகமில்லாமல் உலர்வாக இருக்கும்.
பழத்தின் எதாவது ஒரு பகுதியில் சிறிய ஓட்டை போடப்பட்டுள்ள தடயம் இருந்தால் அந்தப் பழங்களை வாங்க வேண்டாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு கலந்து, வாங்கி வந்த மாம்பழங்களை நன்றாகக் கழுவிய பிறகு, தோல் நீக்கிச் சாப்பிடலாம்.”