29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
p20a
பெண்கள் மருத்துவம்

தாய்ப்பால் தவிர்க்காதீர்!

‘ம்ம்மா…’ எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பிக்கிறது. ”தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்” என்கிறார்கள் மகப்பேறு மருத்துவரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ. தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங்களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே…

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.
p20a
தாய்(ப்)பால் புகட்டும் முறை:

குழந்தை வாய் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். குழந்தையின் வாயைத் தாயின் மார்பகத்தில் வைத்து அழுத்தக் கூடாது. குழந்தையின் வாய் திறந்த நிலையில் இருக்க வேண்டும். மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைக்காமல், காம்புப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பகுதி முழுவதும் (Aerola) குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திறந்திருக்க வேண்டும். குழந்தையின் கீழ்த்தாடை மார்பகத்தின் கீழ்ப் பகுதியைத் தொட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் குழந்தைக்குத் தேவை இல்லை. குழந்தைக்குத் தேவையான தண்ணீரும்கூட தாய்ப்பாலிலேயே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழித்தால், தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடித்திருக்கிறது என்று அர்த்தம். சிறுநீர் மஞ்சளாகவோ அல்லது நாற்றம் எடுத்தாலோ குழந்தை தனக்குத் தேவையான அளவு தாய்ப்பாலைக் குடிக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் எடை குறையும். 10 முதல் 15 நாட்களுக்குள் பிறந்தபோது இருந்த எடை மீண்டும் வந்துவிடும். மாறாக மெலிந்தே காணப்பட்டால் தாய்ப்பாலைச் சரிவரக் குடிக்காமல் இருக்கிறது என்று அர்த்தம்.

தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், புட்டிப்பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் உருவாகும். தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை. மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கை, அவை தூண்டப்படும் விதத்தைப் பொருத்தே தாய்ப்பால் சுரக்கும் அளவு அமைகிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்கூட ஒரு தாயின் தாய்ப்பால் சுரப்புத் திசுக்களைத் தூண்டும்.
p21a
குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுத்திறன் மற்றும் புத்திக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் மூளை செல்கள் அதிக வேகமாக வளர்ச்சி அடைகின்றன என்று யுனிசெஃப் ஆராய்ச்சி கூறுகிறது. தாய்ப்பால் முற்றிலும் தூய்மையானது – பாதுகாப்பானது; கால, காலத்துக்கும் குழந்தைகளுக்கு நோய், நொடி இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க வல்லது; அதனால்தான் இதனை ‘நீர்மத்தங்கம்’ என்கிறார்கள்.

அம்மா அழகாயிடுவாங்க:

குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு. தாய்ப்பால் கொடுக்கும்போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.

பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

சிலர், ”குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது” என்று சொல்வார்கள். குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும்.

மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் இது. இதற்கு தாய்ப்பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது. குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய்வைத்துப் பால் குடித்தால், மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக்கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும். தாய்ப்பாலும் சரியாக வெளிவராது. இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ் செய்துவிட்டாலே போதும். அதேபோல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான வெறும் உணவு மட்டும் அல்ல… தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும்கூட!

Related posts

மாதவிடாய் பிரச்னைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்தும்!

nathan

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

nathan

ஆய்வு முடிவுகள்.!பாவாடை கட்டினால் புற்று நோயா.?

nathan

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்

nathan

ஹார்மோன் கோளாறு ஆகும். பி.சி.ஓ.எஸ் கொண்ட பெண்களுக்கு கொரோனா தொற்று எளிதில் தாக்க அதிக வாய்ப்பு…

nathan

பெண்களே…. ஒரு மாதத்தில் 2 முறை மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் இதோ..!

nathan

பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!

nathan

முப்பதை தாண்டாதீங்க..

nathan