உங்கள் வீட்டில் ஓட்ஸ் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? சரி, நல்ல செய்தி. நீங்கள் அதனை குளிப்பதற்கும், உங்கள் முகத்திற்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஓட்ஸ் கொண்டு அழகைப் பராமரித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
குறிப்பாக ஓட்ஸ் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, இறந்த செல்களை விரைவில் வெளியேற்றும். சரி, இப்போது அந்த ஓட்ஸைக் கொண்டு அழகை எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம்.
உடனடி சிகிச்சை
முகப்பருவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? முகத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கவும், அதிகப்படியான எண்ணெயை நீக்கவும், எரிச்சல் கொண்ட தோலிலிருந்து விடுபடவும் ஓட்ஸ் பயன்படுகின்றது. சிறிதளவு ஓட்ஸை மைக்ரோவேவில் வைத்து, பின் அறை வெப்ப நிலைக்கு வந்தவுடன் பாதிப்படைந்த இடங்களில் தேய்த்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
ஃபேஸ் வாஷ்
ஓட்ஸில் உள்ள சபோனின் அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்க பயன்படுகின்றது. 2 தேக்கரண்டி ஓட்ஸ், 1 தேக்கரண்டி சூடான நீர், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உடனடி கிளின்சரை நீங்களே தயாரிக்கலாம். வட்ட வடிவிலான இயக்கங்களை கொண்டு முகத்தில் தேய்த்து, பின் அலசவும். தேனானது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கின்றது.
சென்சிடிவ் ஸ்கின் ஸ்கரப்
ஒரு தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் 2 தேக்கரண்டி தயிர் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்க வேண்டும். அந்த கிரீமானது தோலை பாதுகாத்து மென்மையாக்குகின்றது. குறிப்பாக வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு மிகவும் பயனை அளிக்கிறது.
தேங்காய் எண்ணெய் ஸ்கரப்
2 தேக்கரண்டி ஓட்ஸ், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை மற்றும் சூடான தண்ணீர் சிறிதளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கிக் கொண்டு அதனை முகத்தில் தடவிக் கொள்ளவும். இதனை உரித்தெடுக்கும் போது முகம் ஒளிரும்.
பேக்கிங் சோடா ஓட்ஸ் ஸ்கரப்
சம அளவிலான ஓட்ஸ் மற்றும் பேக்கிங் சோடாவுடன் 1 தேக்கரண்டி நீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக பேஸ்ட் போல் செய்து கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்து பின் நன்கு அலசவும்.
ஓட்ஸ் மினி மாஸ்க்
2 தேக்கரண்டி ஓட்ஸ், 2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.
ஊட்டமளிக்கும் ஸ்க்ரப்
1/2 கப் பால், 1 தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 2 தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு அதனை அப்படியே விட்டு விட்டு, பின் முகத்தில் பூசி, இரண்டு நிமிடங்கள் தேய்த்து நன்றாக கழுவி விடவும்.
ஆன்டி-ஏஜிங் மாஸ்க்
½ கப் [சமைத்த] ஓட்ஸ், 1 முட்டை, மற்றும் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உலர் ஷாம்பு
ஓட்ஸை நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடி உச்சந்தலை அரிப்பை போக்க மற்றும் தலையில் எண்ணெய் வழிவதை தடுக்க பயன்படும்.
ஓட்ஸ் மற்றும் தேன் பால் குளியல்
1/2 கப் ஓட்ஸ், 1/4 கப் பால் பவுடர், இரண்டு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, துணியில் பை போல கட்டிக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் குளிக்கும் வாளியில் வைத்து விட்டு, அதில் நீரை நிரப்புவதன் மூலம் ஈரப்பதமான இயற்கை குளியலுக்கு தயாராகலாம். இதில் உங்களுக்கு விருப்பமான வாசனை எண்ணெய்களை சேர்த்துக் கொண்டு குளிக்கலாம்.
ஓட்ஸ் பாடி ஸ்கரப்
சம அளவிலான ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை, கைப்பிடியளவு ஓட்ஸுடன் கலந்து கொள்ளவும். தோலில் அதனை நன்றாக தேய்த்து விட்டு பின் நன்கு அலசிக் குளிக்கவும்.
ஓட்ஸ் நாட்டுச் சர்க்கரை பாடி ஸ்க்ரப்
2 தேக்கரண்டி ஓட்ஸ், 2 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை, 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். முழங்கைகள், முழங்கால்கள் முதலிய இடங்களில் அதனை கொண்டு நன்றாக மசாஜ் செய்யவும். கற்பனை செய்ய இயலாத மிருதுவான சருமத்தைப் பெறலாம்.