சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வரகு அரிசி, தயிர், பச்சை வெங்காயம், உப்பு. வரகு அரிசியுடன் தேவையான அளவு நீர்விட்டு சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பச்சை வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து சாப்பிடலாம். தினமும் காலையில் இதை சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும்.
வரகு அரிசி உன்னதமான மருத்துவ குணங்களை கொண்டது. சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல், புளியோதரையாக செய்து சாப்பிடலாம். உடலுக்கு வலிமையை கொடுக்கும் இது வலியை போக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வரகு அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்.
வரகு அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துத்துக்களை கொடுக்கும். உடலை தேற்றும். வரகு அரிசி அற்புதமான உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.சிறுதானியத்தின் மற்றொரு வகையான குதிரைவாலி அரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி, நல்லெண்ணெய், பெருங்காயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடுகு, காய்ந்த மிளகாய், புளிப்பில்லாத தயிர். பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் பெருங்காயம், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போடவும். வேக வைத்த குதிரைவாலி அரிசியை போடவும். தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து கலந்தால் தயிர் சாதம் தயார்.குதிரை வாலி தானியம் தனித்தன்மை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, எளிதில் செரிமானம் ஆகும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் பருமனை குறைக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு சிறந்த உணவு. குதிரை வாலியை அன்றாடம் உணவில் சேர்ப்பதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு சத்து அதிகரிக்கும். இது ஊட்டச்சத்துள்ள உணவாக உள்ளது.