ஹார்மோன்கள் ரசாயன செய்தியாளர்கள் நேராக ரத்தத்தில் கலப்பவர்கள் திசுக்களுக்கு சென்று தன் செயல்களை ஆற்றுபவர்கள். வளர்ச்சி, உணவின் செரிமானம், சத்துக்கள் உள் எடுத்துக் கொள்ளுதல். இனப் பெருக்கும், கவனம், உடல் சூடு பராமரிப்பு, தாகம் என பல முக்கியமான செயல்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுவது ஹார்மோன்கள்.
ஹார்மோன் சுரக்கும் முக்கியமான சுரப்பிகள் :
பிட்யூட்டரி, பினியல், தைமஸ், தைராய்டு, அட்ரினல், கணையம், டெஸ்டிஸ், சினைப்பை இவை மிக நுண்ணிய அளவில் ஹார்மோன்களை சுரந்து மிகப்பெரிய அளவில் செயலாற்றுபவைகளாக இருக்கின்றன. குறிப்பாக வளர்ச்சிக்கான ஹார்மோன் சரிவர வேலை செய்யவில்லை எனில் படபடப்புடனும், மனச்சோர்வுடனும் இருப்பர் ஆண்களுக்கு சீக்கிரம் வழுக்கை ஏற்படும். தாம்பத்ய வாழ்வில் நாட்டமின்மை இருக்கும், உடலின் சதை குறைவு, சக்தியின்மை, எதனையும் கவனிக்க முடியாமை, மறதி, உலர்ந்த சருமம், அதிக சோர்வு என இருக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவரை அணுகவும்.
ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கும் சில காரணங்கள் :
எல்லாருடைய உடலும் பல மாறுபாடுகளை காலப்போக்கில் மேற்கொள்ளும். சில இயற்கையானவை, சில செயற்கையானவை. உதாரணமாக வயது கூடுவதில் ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. ஆனால் நோய், சுற்றுப்புற காரணம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள், மாற்றங்கள் செயற்கையானவை. வயது கூடும் பொழுதும் பல ஹார்மோன்கள் நல்ல நிலையிலேயே வேலை செய்யும். திசுக்களின் அழிவினால் சில மாறுதல்களும் ஏற்படும்.
ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படலாம். ஹார்மோன் செயல்பாடு திறன் குறைபாடு ஏற்படலாம். ரத்தத்தில் ஹார்மோனின் அளவு மாறுபடலாம். மாதவிடாய் நிற்றல் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஏற்படலாம். வயது கூடும் பொழுது எல்லா சுரப்பிகளுக்குமே சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். வளர்ச்சி ஹார்மோன் குறையும். பிட்யூட்டரி சுரப்பி சிறிதாகும்.
தசைகள் குறையும். இருதய செயல்பாடு குறையும். எலும்பு தேய்மானம் கூடும். கடுமையான நோய்கள் ஹார்மோன்கள் செயல்பாட்டினையும், சுரப்பிகளின் செயல்பாட்டினையும் பல விதத்தில் பாதிக்கும். பொதுவில் ஹார்மோன் செயல்பாடு முடியும் பொழுது கல்லீரலும், சிறுநீரகமும் அதனை உடைத்து செயலற்றதாக்கி விடும். ஆனால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு உடையோருக்கு இந்நிகழ்வு சரிவர இயங்காததால் பல பாதிப்புகள் கூடும்.
முறையற்ற ஹார்மோன்கள் செயல்பாடு ஏற்படுவதன் காரணங்கள் :
பிறவியிலேயே சில குறைபாடுகள், அறுவை சிகிச்சை, தீவிர புற்று நோய் சிகிச்சை, புற்று நோய், கிருமி தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருத்தல் ஆகியவை ஆகும்.
சோர்வு :
பல நேரங்களில் ஹார்மோன் சரிவர இயங்காமையின் அறிகுறிகள் பல்வேறு இருக்கும். அதில் முக்கியமான ஒன்று சோர்வு. உடல் நலம் இல்லாதது போல் இருக்கலாம். தூங்கி எழுந்த பிறகும் சோர்வாக இருக்கலாம். சக்தி இல்லாதது போல் இருக்கலாம்.
தூக்கம் :
மனச்சோர்வு, மன உளைச்சல் இவை சில குறிப்பிட்ட ஹார்மோன்களின் சரிவர இயக்கமின்மையால் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். இதனால் போதுமான அளவு தூக்கம் இல்லாது இருக்கலாம்.
படபடப்பு, எரிச்சல்:
கார்டிசால், டெஸ்டோஸ்டீரான் (அ) ஈஸ்ட்ரஜன் இவற்றில் குறைபாடு ஏற்பட்டால் சட்டென்ற கோபம், எரிச்சல், ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்க மாட்டார்கள். நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுவதன் இத்தகு அறிகுறிகள் இருக்கும்.
சரும மாற்றம் :
சருமம், முடி, நகம் இவற்றில் அதிக மாற்றம் ஏற்படும். பலர் இதனை வயதின் காரணம் என்று எண்ணி கவனிக்காது இருந்து விடுவர். தைராய்டு குறைவாய் இருந்தாலும் இத்தகு பாதிப்புகள் ஏற்படும்.
இரவில் அதிக வியர்வை:
மாத விடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜெஸ்டரான் ஹார்மோன் மாறுபாடுகளால் ஒருவித படபடப்பு, இரவில் அதிக வியர்வை போன்றவை ஏற்படலாம். சரியான உணவு, மன உளைச்சலின்மை, சுற்றுப்புறச் சூழல் தூய்மை, உடற்பயிற்சி இவை கண்டிப்பாய் உங்கள் ஹார்மோன்கள் சீராய் இயங்க உதவும்.
மன உளைச்சல் :
அதிக உடல் உழைப்பு, அதிக மனவேதனை, கவலை இவை மன உளைச்சலை உண்டாக்கலாம். இதனை ஈடு கொடுக்க அட்ரினல் சுரப்பி கார்டிசால் ஹார்மோனை சுரக்கலாம். இது இல்லையெனில் உடல் அபாயகரமான பாதிப்புகளுக்குள்ளாகலாம்.
சில முக்கியமான மருத்துவ ரீதியான மன உளைச்சலுக்கு காரணங்கள்.
* அலர்ஜி
* கடுமையான நோய்
* விபத்து, எலும்பு முறிவு
* கடும் கிருமி பாதிப்பு
* கடும் வெப்பம்
* கடும் குளிர் ஆகியவை ஆகும்.
மற்றும் குடும்ப பொருளாதார ரீதியாக ஏற்படும் மன உளைச்சல்களும் ஹார்மோன் பாதிப்பினை ஏற்படுத்தும். பரம்பரை பரம்பரை வழியாகவும் சிலருக்கு ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் ஹார்மோன்கள் சரிவர இல்லை என்பதனை உடல் அறிகுறிகள் காட்டும்.
* தொடர்ந்து எடை கூடி கொண்டே இருக்கின்றதா. அளவான உணவு, உடற்பயிற்சி இவை இருந்தும் ஏனோ எனக்கு எடை குறையவேயில்லை என்று வருத்தப்படுகின்றீர்களா? உங்கள் ஹார்மோன்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
* வயிற்றில் கொழுப்பு சத்து சேர்ந்து உடலில் சதை சத்து குறைந்து உள்ளதா.
* எப்பொழுதுமே சோர்வாக உள்ளதா.
* கோபம், படபடப்பு, சோர்வு என எப்பொழுதும் இருக்கின்றதா.
* தூக்கமின்மை இருக்கின்றதா.
* அதிக வியர்வை குறிப்பாக பெண்களுக்கு இரவில் இருக்கின்றதா.
* செரிமான குறைபாடு இருக்கின்றதா.
* நன்கு உண்ட பிறகும் உண்ண வேண்டும் என்று தோன்றுகின்றதா? ஹார்மோன்கள் டெஸ்ட் உடனடி செய்து கொள்ளுங்கள்.