இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெயை தினசரி உபயோகிக்கலாம்.
கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.
செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.