அழகை அதிகரிக்க என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை தடவி பராமரித்தாலும், தூக்கத்திற்கு இணையாக முடியாது. ஆம், நல்ல தூக்கம் அழகை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். தற்போது பல சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதற்கு, தூக்கமின்மையும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணமாக உள்ளது.
அதிலும் இரவில் தூங்கினால் மட்டும் தானா என்று கேட்டால், மதிய வேளையில் குட்டித் தூக்கம் போட்டாலும் அழகை அதிகரிக்கலாம். அதனால் தான் வீட்டில் நன்கு சாப்பிட்டு தூங்கி எழுபவர்களின் முகம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக உள்ளது.
அதற்காக மதிய வேளையில் மணிக்கணக்கில் படுக்கக்கூடாது. 15 நிமிடம் கண்களை மூடி நன்கு அயர்ந்து தூங்கி எழுந்தாலே போதும். சரி, இப்போது பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் மேற்கொள்வதால் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
சரும செல்கள் புதுப்பிக்கப்படும்
தூக்கத்தை மேற்கொள்ளும் போது, உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சரும செல்கள் புதுப்பிக்கப்படும். இதனால் தான் தூங்கி எழுந்த பின்னர் முகம் புத்துணச்சியுடனும், பொலிவோடும் காணப்படுகிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள
் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பல அழகு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொள்வதோடு, பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதால், அவ்வப்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, அதனால் முகத்தில் பருக்கள், கருவளையங்கள், பொலிவிழந்த சருமம் போன்றவை வருவது தடுக்கப்படும்.
முதுமை தோற்றத்தைத் தடுக்கும்
உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது, முதுமைத் தோற்றம் விரைவில் வருவதோடு, வேறு சில அழகு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் மதிய வேளையில் குட்டித் தூக்கம் மேற்கொண்டு, உடலை ரிலாக்ஸ் செய்வதால், மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறையும். மேலும் குட்டி தூக்கம் மேற்கொள்ளும் போது, கொலாஜென் அளவு அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் வருவது தடுக்கப்படும்.
எடை குறைவும்
கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த தூக்க மருந்து ஆராச்சியாளர், தினமும் 20-90 நிமிடங்கள் அதுவும் 4 மணிக்குள் தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார். எனவே எடையைக் குறைக்க கஷ்டப்படாமல், மதிய வேளையில் தூங்கி எழுங்கள்.
விரைவில் குணமாகும்
மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால், முகத்தில் ஏற்பட்ட முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் போன்றவை விரைவில் போகும். மேலும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சரும சுருக்கங்கள் வருவது தடுக்கப்பட்டு, பிரச்சனையில்லாத அழகான சருமத்தைப் பெறலாம்.