இன்னமும் நம் பெண்கள் துணிக்கடைக்கு போகும்போது, தனக்கு வேண்டிய உள்ளாடையை தேர்ந்தெடுத்து வாங்க அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்கள். நகர்ப்புறப் பெண்கள் பரவாயில்லை. கிராமப்புறங்களில் நிலைமை ரொம்பவும் மோசம். அவரவருக்கு வேண்டியதை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். இதை கேட்பதிலோ, விசாரித்து வாங்குவதிலோ ஏன் தயக்கம்? அவரவர் உடல் வாகுக்கு பொருந்தக்கூடிய ‘பிரா’வை அணியவில்லை என்றால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?
வெட்கத்தை விட்டுப் பேசுவோம்.
தவறான சைஸ் பிரா அணிவதால் மார்பகத்துக்கு கீழே கருத்து விடும். முதுகு வலி, தோள் பட்டை வலி ஏற்படலாம். பிராவின் ஸ்ட்ராப் பதியும் இடங்கள் வெளுத்துப் போயோ அல்லது சிவந்து போயோ காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா சைஸ் சரியில்லை என்று அர்த்தம். முதுகுப் பக்கமாக இருக்கும் ஸ்ட்ராப் ஒரே இடத்தில் நில்லாமல் ஏறிக்கொண்டே போனாலும் ராங் சைஸ் பிரா அணிந்திருக்கிறீர்கள் என்பதே காரணம். மார்பகத்தின் அளவை விட பிராவின் கப் சைஸ் சிறியதாக இருந்தால் ரொம்ப அன்ஈஸியாக இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அசிங்கமாக தெரியும்.
பகல் முழுக்க அணிந்திருக்கிறோமே என்று இரவில் தூங்கும்போது நிறைய பேர் பிராவை கழட்டி விடுகிறார்கள். 34 சைஸுக்கு மேற்பட்டவர்கள் இதுபோல செய்யும்போது அவர்களது மார்பகம் மேலும் தளர்ந்துப்போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அந்த சைஸுக்கு குறைவாக இருப்பவர்கள் இரவில் அணிவதும், கழட்டி வைப்பதும் அவரவர் வசதி.சில பேர் டார்க் நிற ஆடைகளுக்கு வெள்ளைநிற பிராவையும், வெளிர்நிற உடைகளுக்கு கருப்பு பிராவையும் அணிகிறார்கள்.
இது தவறான காம்பினேஷன். ‘பளிச்’சென்று கவர்ச்சியாக தெரிந்து, மற்றவர்களை தேவையே இன்றி உங்கள் பக்கம் ஈர்க்க வழிகோலும். அடர்வண்ண உடைகளுக்கு கருப்பு, வெளிர்நிற உடைகளுக்கு வெள்ளை என்பதே பொருத்தம். இல்லையேல் பலவித வண்ணங்களில் நிறைய பிரா வாங்கி அந்தந்த உடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப மேட் சிங்காக அணியலாம். இவ்வளவு தொல்லை வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஸ்கின் கலர் பிரா வாங்கி உடுத்துவது உத்தமம்.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு என்று சிறப்பு பிரா விற்கிறது. கடைகளில் விசாரித்தால் எடுத்துக் கொடுப்பார்கள்.உடுத்துவது எந்த பிராவாக இருந்தாலும் அது தரமானதாக, நல்ல தயாரிப்பாக இருப்பது முக்கியம். இந்த விஷயத்தில் சிக்கனம் பார்ப்பது நல்லதல்ல.