25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
7
மருத்துவ குறிப்பு

தீக்காயத்துக்குத் தீர்வு என்ன?

தீபாவளிக்கு மட்டுமின்றி, எல்லா கொண்டாட்டங் களுக்குமே பட்டாசு வெடிக்கிற கலாசாரம் பெருகி விட்டது. பண்டிகை தினங்களில் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் பட்டாசு வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த மகிழ்ச்சி ஊட்டும் சம்பவம், சில நேரங்களில் துயரம் தரக்கூடியதாகவும் மாறிவிடுவதுதான் சோகம்.

அமெரிக்கா, ஐரோப்பா, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் பட்டாசுகளை வீட்டிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ வெடிக்க முடியாது. வெடி வெடிப்பதற்கென தனி இடம் உண்டு. அங்குதான் பட்டாசுகளை வெடிக்க முடியும். ஆனால், இந்தியாவில் ஊரெங்கும் பட்டாசு வெடிக்கிறோம். அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வளவாக அக்கறை செலுத்துவதில்லை. பட்டாசு வெடிப்பவர்கள் அதிக கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் பட்டாசுகளைக் கையாள வேண்டியது அவசியம்.

இதில் அலட்சியம் ஆகாது. விளையாட்டு கூடாது. அப்போதுதான் ஆபத்து ஏற்படாது. பட்டாசு தயாரிக்கும் இடங்களிலும் தவறுகள் நேரும்போது தீ விபத்து ஏற்பட்டு அங்குள்ள தொழிலாளர்களைப் பலி வாங்குகிறது. வீட்டிலும் ஸ்டவ் வெடித்து, தீக்காயங்கள் ஏற்படுவதுண்டு. அலுவலகங்களில் மின்கசிவு ஏற்படும்போது தீ விபத்து ஏற்படவும் தீக்காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

தீக்காயத்துக்கு முதலுதவி பொதுவாக தீக்காயத்தில் வெப்பத்தைக் குறைப்பதே முதலுதவியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே, காயம் ஏற்பட்ட உடல் பகுதியை உடனே தண்ணீரில் மூழ்க விடுங்கள். அல்லது தண்ணீரில் நனைத்தத் துணியால் காயத்துக்குக் கட்டுப்போடுங்கள்.

பொதுவாக, முகம், கை, கைவிரல்கள் ஆகியவற்றில்தான் தீக்காயங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். ஆனால், தீக்காயம் பட்ட கையைத் தண்ணீரில் நனைப்பதற்குப் பலரும் தயங்குவார்கள். தீக்காயம் பட்ட உடல் பகுதியைத் தண்ணீரில் நனைத்தால், கொப்புளம் ஏற்பட்டுவிடும் என்று ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இது உண்மையில்லை.

தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும். அதில் கொப்புளம் ஏற்படுவதும் தடுக்கப்படும். தீக்காயம் பட்ட இடம் முகம் என்றால், உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவுங்கள். கையென்றால், குழாய் தண்ணீரில் கையை நனையுங்கள். இவ்வாறு 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் நனைத்த பின்னர், காயத்தின் மீது `சில்வர் சல்பாடயசின்’ மருந்தைத் தடவுங்கள்.

பெரிய காயமென்றால், காயத்தின் மீது ஒட்டிக்கொள்ளாத Framycetin tule அல்லது BPP (Boiled Potato Peel) பாண்டேஜ் பயன்படுத்தியும் கட்டுப்போடலாம். இதைப் பயன்படுத்தினால், கட்டுப் பிரிக்கும்போது வலி இருக்காது.தீக்காயம் பட்ட உடல் பகுதியில் மோதிரம், வளையல், கைக்கடிகாரம் போன்றவற்றை உடனடியாக அகற்றிவிடுங்கள். காயம் வீங்கிய பிறகு, அவற்றை அகற்றுவது சிரமம் தரும்.

எந்தவொரு தீக்காயத்துக்கும் முதலுதவியோடு நின்றுவிடாதீர்கள். மருத்துவரிடம் சென்று தகுந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யுங்கள்.இப்படிச் செய்யாதீர்கள்!தீக்காயத்தின் மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து, தேன், எண்ணெய் போன்றவற்றைப் பூசுவது நல்லதல்ல. இவை காயம் குணப்படுவதைத் தாமதப் படுத்தும்.தீக்காயம் கண்ணில் பட்டால்?பட்டாசு வெடிக்கும்போது முகத்திலும் கண்ணிலும் ஏற்படும் காயங்களும், பாதிப்புகளும் வாழ்க்கை முழுவதும் மனவருத்தம் அளிப்பதாக அமைந்துவிடும்.

பட்டாசு விபத்துகளால் கண்களுக்கு உண்டாகும் காயங்களை வெளிப்புறக் காயங்கள், உட்புறக் காயங்கள் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இமைகள், புருவம், மயிர்க்கால்கள் சிதைந்தால் அது வெளிப்புறக் காயம் எனவும், கண்ணின் விழிவெளிப்படலம், கார்னியா, விழிலென்ஸ், விழிக்கோளம் முதலியவை பாதிக்கப்பட்டால், அது உட்புற காயம் எனவும் கூறப்படும். பொதுவாக, வெளிப்புறக் காயங்கள் முக அழகைச் சிதைக்கும். உட்புறக் காயங்கள் பார்வையைக் கெடுக்கும்.

பட்டாசு வெடிப்பதால் கண்ணில் உண்டாகிற உட்புறக் காயங்கள் இரண்டு விதமாக ஏற்படுகின்றன. பட்டாசின் தீப்பொறி உண்டாக்கும் அதிக வெப்பத்தால் மட்டும் ஏற்படும் காயம் ஒருவகை. பட்டாசு துகள்கள் கண்ணில் பட்டு ஏற்படும் காயம் இன்னொரு வகை. காயம் எதுவானாலும், அது பார்வையைப் பாதித்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காரணம், `கார்னியா’ எனும் கண் பகுதியில் தீக்காயம் பட்டால், பார்வை பறிபோய்விடும். ஆகவே, கண்ணில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக முதலுதவிகள் செய்து, மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கண் காயத்துக்கு என்ன முதலுதவி?

சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, அந்தத் தண்ணீர் ஒழுக்கில், கண்களைத் திறந்தபடி 15 நிமிடங்கள் காட்டவும் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் பாதிப்புக்குள்ளான கண்களை மூழ்க வைத்து, கண் இமைகளைத் திறந்து திறந்து மூடவும். இதையும் 15 நிமிடங்கள் செய்யவும். இவற்றைச் செய்ய வழியில்லை என்றால், பாதிக்கப்பட்ட நபரைப் படுக்க வைத்து, கண்ணை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொள்ளவும். இமையைப் பிரித்து விரித்துக்கொள்ளவும். ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு விழியின் மீது ஊற்றிக் கழுவவும். இதையும் 15 நிமிடங்கள் செய்யவும். பிறகு, சுத்தமான பாண்டேஜ் கொண்டு கண்ணுக்குக் கட்டுப்போட்டு, கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

உடலில் தீப்பிடித்துக் கொண்டால்?

தீ விபத்தின்போது ஒருவருக்கு உடலில் தீப்பிடித்துக்கொண்டால், அந்த நபரை ஒரு கனத்த போர்வையாலோ, கம்பளியாலோ மூடி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் தீயை அணைத்த பிறகு, அவரைக் காற்றோட்டமான இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும். மின்விசிறியால், காயத்தின் வெப்பத்தைக் குறைக்கலாம். தொடர்ந்து, ஏற்கனவே நாம் பார்த்த முதலுதவி முறைகளைப் பயன்படுத்தி, தீக்காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும்.

உடல் முழுவதும் தீக்காயமென்றால், தண்ணீரில் நனைத்த சுத்தமான வேட்டியால் உடலை மூடலாம்.உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு, உடலில் தண்ணீர் சத்து வெகுவாக குறைந்துவிடும். இதனால், ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் சலைன், ரிங்கர் லேக்டேட், ரத்தப் பிளாஸ்மா போன்றவை ஏற்ற வேண்டியது அவசரமான அவசியம். ஆகவே, காலதாமதம் செய்யாமல், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையைத் தொடர வேண்டும்.
தீக்காயத்துக்கு என்ன சிகிச்சை?

தீக்காயத்தால் ஏற்படுகிற தோல் பாதிப்பு மூன்று வகைப்படும். சருமத்திலும் அதன் கீழ் உள்ள பகுதியிலும் தீக்காயம் ஏற்படுவது முதல் டிகிரி. சருமத்துக்குக் கீழே தசைப்பகுதியும் பாதிக்கப்படுமானால் அது இரண்டாவது டிகிரி. தசைப் பகுதிக்குக் கீழே ஆழமாக ஊடுருவி, எலும்பு மற்றும் உள் உறுப்புகளைப் பாதிப்பது மூன்றாம் டிகிரி.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வகைத் தீப்புண் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுவது மருத்துவ நடைமுறை.
முதல் டிகிரி தீக்காயத்தால் உடலில் பயங்கர எரிச்சல் ஏற்படும். அப்போது குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் துடைக்கப்படும். களிம்புகள் தடவப்படும். பிறகு, நோயாளியின் உடலில் இருக்கும் கருகிய சருமத்தை அகற்றிவிட்டு, வலியைப் போக்குவதற்கு வலி நிவாரண ஊசிகள் மற்றும் காயம் குணமாவதற்குத் தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படும்.

இரண்டாம் டிகிரி தீப்புண் ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் திரவம், தீக்காயத்தால் சேதமடைந்த ரத்தக்குழாய்கள் வழியாக வெளியேறிவிடும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படும். அப்போது உயிருக்கும் ஆபத்து வரலாம். எனவே, இதைத் தடுக்க ரத்தக்குழாய் மூலம் குளுக்கோஸ் சலைன், ரிங்கர் லேக்டேட், ரத்தப் பிளாஸ்மா போன்றவை உடலுக்குள் செலுத்தப்படும். இத்துடன் வழக்கமான வலி நிவாரணிகளும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் தரப்படும்.

மூன்றாம் டிகிரி தீப்புண்தான் மிகவும் ஆபத்தானது. தீவிர சிகிச்சை அளித்தால் மட்டுமே ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும். இவர்களுக்கு உடல் முழுவதும் தீக்காயம் இருக்கலாம்; ஆழமாகப் பாதித்திருக்கலாம்; தசை அழுகியிருக்கலாம். அப்போது மயக்க மருந்து கொடுத்து, அழுகிய தசைகளை அகற்றுகிறார்கள். பிறகு, கொலாஜன் எனும் மருந்தைத் தீக்காயத்தில் தடவுகிறார்கள். இது செயற்கை சருமம்போல் செயல்பட்டு, அந்த இடத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுத்துவிடும். என்றாலும், இவர்களுக்கு தசையோடு ஒட்டிய தசைநாண்கள், நரம்புகள் போன்றவையும் பாதிக்கப்படுவதால், கை, கால்,
தொடை போன்ற இடங்களில் உள்ள தசைகளின் இயக்கம் குறைந்துவிடும்.

இதன் விளைவால், விரல்களை / முழங்கையை நீட்டி மடக்க முடியாமல் போகலாம். நெஞ்சு, முதுகு, தொடைப் பகுதிகளில் மாறாத தழும்பு உண்டாகிவிடலாம். இதற்குப் பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படும். செயல் இழந்த கை கால்களுக்கு பிசியோதெரபி மூலம் சில மாதங்களுக்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்படும். இம்மாதிரி சிகிச்சைகளால் தீக்காயத் தழும்புகள் குணமாக அதிக நாட்கள் ஆகும். அதிக செலவும் ஆகும். இதற்குத் தீர்வு தரும் வகையில் வந்துள்ளன கார்பன் டை ஆக்ஸைடு லேசர் சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சைகள்.

தழும்பை மறைக்கும் சிகிச்சைகள்

தீக்காயத் தழும்புகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படும். அகலமான தழும்பாக இருந்தால் அதை ‘கீலாய்டு தழும்பு’ (Keloid scar) என்றும் நீளமான தழும்பாக இருந்தால் ‘ஹைப்பர்ட்ரோபிக் தழும்பு’ (Hypertrophic scar) என்றும் அழைப்பதுண்டு. இந்த இரண்டு வகைத் தழும்புகளையும் கார்பன் டை ஆக்ஸைடு லேசர் சிகிச்சை மூலம் நீக்கி, ஊசி மருந்து மூலம் சருமத்தின் சுருக்கத்தையும் இறுக்கத்தையும் சரி செய்கிறார்கள்.

இறுதியாக ஸ்டெம் செல் சிகிச்சை கொடுத்து சருமத்தின் பழைய நிறத்தை மீட்டு எடுக்கிறார்கள். இதனால் தீக்காயம் பட்ட சருமத்தில் தழும்புகள் இல்லாமல் இயற்கையான சருமம்போல் காணப்படுகிறது என்பதால், நோயாளிகள் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்துத் தன்னம்பிக்கையோடு வாழ முடிகிறது. கைகொடுக்கும் சரும வங்கி பொதுவாகவே, பெரிய தீ விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடல் முழுவதுமே வெந்து விடும். இதுதான் சருமத்துக்கு ஏற்படுகின்ற மோசமான பாதிப்பு. இப்படிப்பட்டவர்களுக்கு உடலில் மொத்த சருமத்தையோ அல்லது பல பகுதிகளுக்கான சருமத்தையோ மாற்ற வேண்டியது வரும். இதற்கு ‘சரும மாற்று சிகிச்சை’ (Skin Transplantation) உதவுகிறது.

உடலின் வேறு பாகத்தில் உள்ள நல்ல சருமத்தை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து, தீயினால் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் பொருத்துவது சரும மாற்றுச் சிகிச்சையின் செயல்முறை. ஆனால், உடலின் பெரும்பாலான பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், அந்த நபரிடமிருந்து நல்ல சருமம் கிடைப்பது சிரமம். அப்போது அடுத்தவரிடம்தான் சருமத்தைப் பெற வேண்டும்.

இதற்கு உதவ வந்துள்ளது ‘சரும வங்கி’ (Skin Bank). உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது போல், சருமத்தைத் தானமாகப் பெற்றுச் சேமித்து வைத்து, தீக்காயம் பட்டவர்களுக்கு அதைப் பொருத்த உதவும் அமைப்பு இது.இயற்கையாக இறந்தவர்கள் மற்றும் விபத்தினால் மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் உடலைத் தானமாகப் பெற்று, 6 மணி நேரத்துக்குள் அந்த உடலின் முதுகு, தொடை மற்றும் கால்களிலிருந்து மேல் சருமத்தை மட்டும் பிரித்தெடுத்து, 85 % கிளிசெரால் திரவத்தில் மைனஸ் 70 டிகிரி குளிர்ச்சியில் பாதுகாக்கிறார்கள். இப்படி ஒருமுறை எடுக்கப்பட்ட சருமத்தை சுமார் 5 வருடங்கள் வரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

தீக்காயம் ஏற்பட்டவருக்குத் தேவைப்படும் வேளையில் இந்த சருமத்தை எடுத்து, சலைனில் அலசி சுத்தப்படுத்தி, தீக்காயம் உள்ள இடத்தில் பொருத்தித் தைத்துவிடுகிறார்கள். இது இயற்கையான சருமம் போலவே செயல்படுவதால், நோயாளிக்கு நோய்த்தொற்று ஏற்பட வழியில்லை. தசைகள், தசைநாண்கள், நரம்புகள் போன்றவை சுருங்குவதில்லை.

கை, கால் தசைகளின் இயக்கம் முடக்கப்படுவதில்லை. சில வாரங்களில் உடலின் சருமம் மற்றும் திசுக்கள் வளர்ந்து புதிய சருமம் உருவானதும், இந்த மாற்றுச் சருமம் உதிர்ந்துவிடும். இந்தச் சிகிச்சையில் வலி குறைவு; தழும்பு எதுவும் உண்டாவதில்லை என்பது நோயாளிகளுக்கு மிகப் பெரிய ஆறுதல். பொதுமக்களிடம் சரும தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெருகினால், தீக்காயத்தால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு, உடலில் தண்ணீர் சத்து வெகுவாக குறைந்துவிடும். இதனால், ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரும். இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் சலைன், ரிங்கர் லேக்டேட், ரத்தப் பிளாஸ்மா போன்றவை ஏற்ற வேண்டியது அவசரமான அவசியம். காலதாமதம் செய்யாமல், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையைத் தொடர வேண்டும்.
டாக்டர் கு. கணேசன்
7

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்

nathan

தெரிஞ்சிக்கங்க…7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்பில் என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க

nathan

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்!!!

nathan

உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… நச்சகற்றும் பாத சிகிச்சை! இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா?

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

தெரிஞ்சிக்கங்க…டயட் என்னும் பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள்!!!

nathan

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

nathan