28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
weight lossN
எடை குறைய

எடை குறைப்பது எளிதல்ல…ஆனால், உங்களால் முடியும்!

தண்ணீர் கூட பணம் கொடுத்தால்தான் கிடைக்கும். வெயிலும் அனல் காற்றும் மட்டும்தான் இங்கு கேட்காமலே கிடைக்கும். இது தவிர இலவசமாகக் கிடைக்கிற ஒரே ஒரு விஷயம் அநேகமாக அறிவுரை மட்டும்தான். அதிலும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் எடை குறைக்க விரும்புவோருக்கும் அரிய பெரிய ஆலோசனைகளை அள்ளி வழங்க ஆயிரம் பேர் உண்டு. நம் மீதுள்ள அக்கறையில்தான் இந்த அறிவுரைகள் கூறப்படுகின்றன என்றாலும், இவ்விஷயம் குறித்த தெளிவோ, அறிதலோ, புரிதலோ அவர்களுக்கு இல்லை என்பதுதான் பிரச்னையே!

நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க எடைக் கட்டுப்பாடு மிக முக்கியம் என்பதில்தான் இந்தக் குழப்பம் ஆரம்பமாகிறது. ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் ஆகியவை வரம்பு மீறாமல் இருக்க, எடையும் வரம்புக்குள் வர வேண்டும்.இந்தச் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் இருந்தால்தான், நீரிழிவாளரின் ஆரோக்கியம் சிறக்கும். எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில், 5 முதல் 7 கிலோ வரை குறைக்க முடிந்தால், அது மிகப்பெரிய நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

எடையை Body Mass Index (BMI)வரையறைக்கு உட்பட்டு – 4 முதல் 7 கிலோ வரை குறைத்தாலே மிக இனிப்பான
மாற்றங்கள் ஏற்படும்.

ரத்த சர்க்கரை அளவு(குளுக்கோஸ்) குறையும்.
ரத்த கொழுப்பு அளவு (கொலஸ்ட்ரால்) கட்டுக்குள் வரும். மூட்டுகளுக்கும் கால்களுக்கும் சுமை குறையும். அன்றாடச் செயல்பாடுகளும்சுவாசித்தலும் மேம்படும். ஆற்றல் அளவு அதிகரிக்கும்.

இந்த விஷயங்கள் உடனே எடை குறைக்கத் தூண்டும்தான். அதற்கு முன் நாம் அறிந்த, நமக்குச் சொல்லப்பட்ட எடை குறைப்பு டிப்ஸ் எல்லாவற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், துறை சாரா நபர்கள் கூறும் எந்த அறிவுரையும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதல்ல!

‘காலையில் சாப்பிடா விட்டால் எடை குறையும்’ என்பது உலகின் மிக முக்கிய மூடநம்பிக்கைகளில் ஒன்று. உண்மையில் காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பவர்களே எடைக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள் என்பது மருத்துவ ஆய்வின் முடிவு. 6,700க்கும் அதிகமான நபர்களிடம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் சோதனையிலும் இது உறுதியாகியுள்ளது. ‘காலை உணவை புறக்கணிப்பவர்களுக்கு, அவர்கள் அறியாமலே, இழந்த கலோரிகளை ஈட்கும் வேட்கை ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளுகிறார்கள். அல்லது அடுத்த வேளை உணவை அதிக அளவில் உட்கொள்கிறார்கள்.

இதனால் குறையவேண்டிய எடை கூடிக்கொண்டே தான் போகிறது’ என்கிறார் வெர்ஜினியாவை சேர்ந்த நீரிழிவு உணவு ஆராய்ச்சியாளர் ஜில் வெய்சன்பெர்கர். காலை உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு நிலை பெறுகிறது. வளர்சிதை மாற்றமும் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் பசி வயிற்றைக் கிள்ளி, அதையும் இதையும் தின்ன வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ‘சமச்சீரான காலை உணவைச் சாப்பிடுவதுதான் அந்த நாளை வெற்றிகரமாகத் தொடங்குவதற்கான வழி. ஒருபோதும் பிரேக் ஃபாஸ்ட்டை பிரேக் செய்யாதீர்கள்’ என்கிறார் ஜில்.

உணவைக் குறைத்து விட்டாலே எடையைக் குறைத்து விடலாம் என்றே பலரும் நம்புகின்றனர். உண்மையில் முறையான உடற்பயிற்சி இன்றி தேவையற்ற எடையை இழக்க முடியாது. உணவை மட்டும் குறைத்து ஒல்லிபெல்லி ஆவது எல்லாம் நிரந்தர விளைவைத் தராது. அது ஆரோக்கியமானதும் அல்ல.

உடற்பயிற்சியை ஒழுங்காகச் செய்வதன் மூலமே, நாள் முழுக்க கலோரிகளை கரைக்கும் வகையிலான தசைகளை நாம் தயார் செய்கிறோம். எடை குறைப்பு, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இலக்குகளை எட்ட, குறைந்தபட்சம் வாரம் 150 நிமிடங்கள் மிதமான – செறிவான உடற்பயிற்சி (Moderate-intensity Exercise) தேவை என்கிறது அமெரிக்கன் டயாபடீஸ் அசோசி யேஷன். இதோடு, தசைகளை வலுப்படுத்தக்கூடிய ரெசிஸ்டன்ஸ் பயிற்சியும் (Muscle-strengthening resistance training) வாரம் 3 முறை தேவை.

மூன்றரை வார உடற்பயிற்சிக்குப் பிறகு, நாம் இழந்த எடையில் 75 சதவிகிதம் கொழுப்பு மூலமாகவும், 25 சதவிகிதம் தசைகள் மூலமாகவும் கரைந்திருக்கும். மிக்சிகனில் உள்ள பிசியாலஜிஸ்ட் லிசா மெரில் மேற்கொண்ட ஆய்விலிருந்து, இந்த உண்மை நமக்குப் புலப்பட்டிருக்கிறது.

எடை குறைப்பு என்பது பலவிதமான கணக்குகளுக்கு உட்பட்டதுதான். உடலின் ஆற்றலுக்குத் தேவையான கலோரிகளை விட குறைவான உணவை நாம் உட்கொள்வோமானால், ஆற்றல் குறைபாடு ஏற்பட்டு எடையும் குறைகிறது. இன்னொரு அறிவியல் ஆய்வு இந்த விஷயத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகிறது. ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ ஆய்விதழ் அளிக்கும் தகவல்களின் படி, புரதம் உள்பட சமச்சீர் சத்துகள் நிறைந்த காலை உணவை உட்கொண்டால், அது வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. ‘சமச்சீரான டயட் மூலமே இந்த திருப்தியை எட்ட முடியும்.

இதனால் எடை குறைப்பு முயற்சியும் வெற்றியை நோக்கிச் செல்லும்’ என்கிறார் ஜில் வெய்சன்பெர்கர். ‘சமச்சீர் உணவானது, உங்கள் உடற் பயிற்சிக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. நோய்களை எதிர்த்துப் போரிடும் ஊட்டச்சத்துகளைத் தருகிறது. அதோடு, பலவித உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிடும் வாய்ப்பையும் வழங்குகிறது’ என்கிற ஜில், இந்தச் சமச்சீர் உணவில் 3 வெவ்வேறு வகைகள் இருக்க வேண்டும் என்கிறார். குறிப்பாக நார்ச்சத்து கொண்டது ஒன்றும், புரதம் அடங்கியது ஒன்றும் மிக அவசியம்.

எடை குறைப்பு முயற்சியில் இருக்கும்போது, எடை எந்திரத்தின் முள் நம்மை மிரட்டிக்கொண்டேதான் இருக்கும். தினம் எடை பார்க்கிற பலருக்கு தன்னம்பிக்கை குறைவு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மனவியல்நிபுணர்கள். நாம் எண்ணுவதும், எடை எந்திரம் காட்டும் எண்ணும் முரணாக இருந்தால் சோர்வாகத்தானே இருக்கும்? தினம் தினம் பார்க்கிற எடையில் துல்லியத்தைப் பெற இயலாது என்பதுதான் உண்மை.

உடலின் நீர் இருப்பைப் பொறுத்தும் எடை வேறுபாடு ஏற்படக்கூடும்.”அதனால் எடை பார்க்கவே கூடாது என அர்த்தம் அல்ல. குறிப்பிட்ட இடைவெளிகளில் எடை பார்த்தால்தானே, நாம் மேற்கொள்கிற உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் பலன் தருகிறதா என அறிய முடியும்? அதனால் வாரம் ஒருமுறை எடை பார்ப்பதே நல்லது” என்கிறார் லிசா மெரில்.

உண்மையிலேயே மாத்திரைகள் மூலமாக எடையைக் குறைத்து விட முடியும் என்றால், நாம் அத்தனை பேரும் தனுஷ் ஆகவோ, ஸ்ருதி ஆகவோ அல்லவா இருப்போம்!

துரதிர்ஷ்டவசமாக, எடை குறைப்பதற்கு நிறையவே கடினமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் இன்று வரை அறிவியல் ரீதியான ஒரே எடை குறைப்பு முறை. (போலி) விளம்பரங்கள் வார்த்தைகளில் வெண்ணெய் தடவி இனிப்பாகச் சொன்னாலும் கூட, மாத்திரைகளாலோ, சப்ளிமென்டுகளாலோ எடையை குறைக்க முடியும் என்பதை மருத்துவ அறிவியல் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

‘இவைஎல்லாம் சிறு துளியை ஊதிப் பெரிதாக்குகிற கானல் நீர் விளம்பரங்கள்’ என்கிறார், இவை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் மெரில். இவை எஃப்டிஏ போன்ற மருத்துவ அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்படாதவை என்பதையும் நினைவில் கொள்க.கடற்கரை முதல் கடைத்தெரு வரை விதவிதமான வண்ணப் பதாகைகளோடு வசீகரிக்கும் வார்த்தைகள் கூறும்எடை குறைப்பு விற்பனையாளர்களை தயங்காமல் கடந்து செல்லுங்கள்!weight lossN

Related posts

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

காலைல செய்ற இந்த விஷயங்கள் எல்லாம் உங்க எடையை அதிகரிக்கச் செய்யுமாம்!!

nathan

உடல் எடையால் கஷ்டப்படுகிறீர்களா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

nathan

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப அவசியம் இத படிச்சு தெரிஞ்சுக்கங்க…

nathan

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!

nathan

தேவையில்லாத சதையை குறைக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்

nathan