இட்ஸ் ஹாட்!
குளிர் காலத்தில் வெறும் வெந்நீரே அமிர்தமாகத் தெரியும். குடிக்க இதமானது மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. நாம் அறியாத வெந்நீரின் பயன்களையும் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் இந்திராணி…
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை லிட்டர் வெந்நீர் குடித்து வருவது நல்லது. பெரும்பாலான நோய்களுக்கு காரணம் மலச்சிக்கல். காலையில் வெந்நீர் குடிப்பவர்களுக்கு வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும். இரவில் படுப்பதற்கு முன் வெந்நீர் குடித்தாலும் வாயுப்பிடிப்பு, புளித்த ஏப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படாது.
சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். குழந்தைகளுக்கும் தேன் கலந்த வெந்நீரை பருகக் கொடுத்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா, இளைப்பு ஆகியவை கட்டுக்குள் வரும். உடல் எடையும் கூடாது.
சிறு கைப்பிடி துளசி இலைகள், ஒரு துண்டு சுக்கு, 4 அல்லது 5 மிளகு, கொஞ்சம் திப்பிலி ஆகியவற்றை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக காய்ச்சி கஷாயம் போல செய்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் தொல்லை முழுமையாக நீங்கும்.
வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் தைலம் விட்டு, ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கடைப்பு, சளி நீங்கும். ஆஸ்துமா பிரச்னையும் நீங்கும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
சுடு தண்ணீரில் குளிக்கும் போது மூட்டு எலும்புகளில் படும்படி ஊற்றி வந்தால் கை, கால் வலி குறையும். நல்லெண்ணெய் கொண்டு வலி உள்ள இடங்களில் மசாஜ் செய்த பின், அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
பொறுக்கும் சூட்டில் வெந்நீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு கலந்து குதிகால் வரை படும்படி உட்கார வேண்டும். இப்படி செய்தால் பாதவலி, குதிகால் வரை குறையும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை செய்யும் போது தலையில் ஈரம் உள்ள துண்டை போட்டுக்கொண்டால் தலைசுற்றல் ஏற்படாது.
அலுவலகத்துக்கு வெந்நீர் கொண்டு செல்பவர்கள் சீரகம், சுக்கு போட்டு கொதிக்க வைத்து எடுத்துச் சென்று குடித்தால் சரியான நேரத்திற்கு பசி எடுக்கும். செரிமானமும் சரியாகும்.”