28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
p16a
கர்ப்பிணி பெண்களுக்கு

முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை!-பெற்றோர் கவனத்துக்கு…

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது, முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே ஏற்படும் உளவியல் பிரச்னைகளைப் பக்குவமாகக் களைய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. ஆனால், ‘எப்பப் பாத்தாலும் குழந்தையைக் கிள்ளுறா, அடிக்குறா…’ என முதல் குழந்தை மீது புகார் சொல்லி, நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் பெற்றோர்கள் பலர்.
p16a
இந்தச் சூழலில், சமீபத்தில் கோவையில் நடந்த அந்தச் சம்பவம் அதிர வைத்திருக்கிறது. கோவையில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து 24 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, திடீரென காணாமல் போகிறது. போலீஸார் தீவிரமாக தேட… மறுநாள் வீட்டில் இருந்த தண்ணீர் பக்கெட்டுக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அந்தக் குழந்தை. அதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தந்தையின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த மூன்றரை வயது மூத்த குழந்தை, `அப்பா, நாம ஒளிஞ்சு விளையாடலாமா?’ என்று கேட்டபோது சந்தேகம் வந்தது போலீஸாருக்கு! குழந்தையிடம், ‘பாப்பா எங்கே..?’ என விசாரிக்க, ‘பாப்பாவை தூக்கி ஒளிச்சு வெச்சுட்டேன்’ என அந்தக் குழந்தை காட்டியது, தண்ணீர் பக்கெட்டை நோக்கி.

இரு குழந்தைகளுக்கு இடையே யான உளவியல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது, பெற்றோர்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்னென்ன என்பது குறித்தெல்லாம் இங்கே பேசுகிறார், கோவை கே.ஜி. மருத்துவ மனையின் மனநல மருத்துவர் பொன்னி.

இது இயல்பே..!

“முதலில், இதுபோன்ற எக்ஸப்ஷனல் செய்திகளைப் படித்து பெற்றோர் பயப்படக்கூடாது. ‘நம்ம வீட்டிலும் அப்படி நடந்துடுமோ’ என்ற பதற்றம் தேவையில்லை. பொதுவாக, தனக்குரிய கவனிப்பு குறையத் துவங்குவது குறித்த கவலை குழந்தைகளுக்கு மட்டுமில்ல, எல்லா வயதினருக்கும் ஏற்படுகிற இயல்பான பிரச்னைதான். மாமியார், மருமகள் உறவில்கூட, நேற்று வரை தன் மீது பாசமாக இருந்த தன் பையன், மனைவி வந்ததும் தன் மீதான அக்கறையில் குறைந்துவிட்டதாக மாமியார் உணர்வதுதான் பிரச்னைக்கு ஆரம்பப்புள்ளி. எனவே, இது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு உளவியல் பிரச்னையே.

செய்யக்கூடாதவை!

p16cமுதல் குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகையால், ‘இது வந்ததுல இருந்து அப்பா, அம்மா நம்மைக் கவனிக்கிறதே இல்ல’ என்று வருந்துவதும், ஒதுங்குவதும் இயல்பே! அதுபோன்ற சமயங்களில், அந்த எண்ணம் மேலும் மேலும் வலுப்படும்படி பெற்றோர் நடந்துகொள்ளக் கூடாது. அதற்காக, ‘தம்பியை/தங்கச்சியை எல்லாம் பிடிக்காது… உன்னை மட்டும்தான் அம்மாவுக்குப் பிடிக்கும்!’ என்று எதார்த்தத்துக்கு மாறாகப் பேசுவதும் வேண்டாம். புதுவரவுக் குழந்தைக்கு நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டுவதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும் குழந்தை, பின் உங்களின் வாக்கை பொய்யாக எண்ணி, இன்னும் காயப்படும்.

அதேபோல, தங்களின் கோபத்தை வெளிப்படுத்தவோ, அல்லது உங்களின் கவனத்தைப் பெற எண்ணியோ, முதல் குழந்தை இரண்டாவது குழந்தையைக் கிள்ளுவது, தட்டுவது போன்ற செயல்களைச் செய்யும். அப்போது குழந்தையின் அந்த

பிஹேவியரை அவமானப் படுத்துவது, பிறரிடம் அது தன் தம்பி/தங்கையை வெறுக் கிறது, அடிக்க நினைக்கிறது என்பதை எல்லாம் குழந்தையின் முன்னிலையிலேயே கதையாகப் பேசுவது… இவையெல்லாம் பெற்றோர் செய்யும் தவறுகள். சில குழந்தைகளுக்கு இதுபோன்ற எண்ணமே வராது. ஆனால், சில பெற்றோரே ‘நம்ம குழந்தைக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்குமோ?’ என்று, தாமாகவே அதை குழந்தையிடம் இந்த எண்ணத்தை விதைப்பார்கள். அதுவும் தவறு.

என்ன செய்ய வேண்டும்?!

பொத்தாம் பொதுவாக, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது எனச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகை பிரச்னை இருக்கும். ஒரு குழந்தை, தன் தம்பி/தங்கையை வெறுப்பதை உணர்ந்தால், ‘அது சின்னப்பிள்ளை, அதை இப்படிப் பேசலாமா? அடிக்கலாமா?’ போன்ற கண்டிப்பு, தண்டிப்பு வார்த்தைகள் கூடாது. மாறாக, அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரி அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

உதாரணத்துக்கு முதல் குழந்தைக்கு `சோட்டா பீம்’ பிடிக்கும் என்றால், அந்த ரோல்மாடல் கதாபாத்திரத்தைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கு கற்பிக்கலாம். ‘சோட்டா பீம் தன்னோட தங்கச்சியை ரொம்ப நல்லா பாத்துக்குவான்’ என்பது மாதிரி குழந்தைகளிடம் சொல்லும்போது, அவர்களும் அதுபோல செயல்படத் துவங்குவார்கள். அதன் பிறகு குழந்தையை அடிக்கவோ, கிள்ளவோ அவர்களுக்குத் தோணாது. விளையாட்டில் ஈடுபாடு உள்ள குழந்தை என்றால், ‘கிரிக்கெட்டுல இப்படி எல்லாம் செய்யமாட்டாங்க. புதுசா டீம்ல ஒருத்தர் வந்தாஅவரையும் சேர்த்து ஒற்றுமையா விளையாடுவாங்க. அப்போதான் ஜெயிக்க முடியும்’ என்பது போன்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பறித்துக் கொடுக்காதீர்கள்!
p16d
நிறைய அம்மாக்கள் கர்ப்பமாக இருக்கும் போதே, புது குழந்தையின் வரவு பற்றி முதல் குழந்தையிடம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். ‘குழந்தையை அம்மாவும், அப்பாவும் மட்டும் எப்போதும் பாத்துக்க முடியாது. நீயும் பாத்துக்கணும். நாம மூணு பேரும் சேர்ந்து தம்பி/தங்கச்சி பாப்பாவை பார்த்துக்கலாம்’ என்று குழந்தை யிடம் பேசும்போது, புதுக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியதில் தன் பொறுப்பும் உள்ளது என்று அது நம்பும்.

முதல் குழந்தை பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், படுக்கும் இடம் போன்ற விஷயங்களில்கூட கவனமாக இருக்க வேண்டும். அதை அவர்களிடம் இருந்து பறித்துக் கொடுக்காமல், அவர்களின் அனுமதியுடன் கேட்டு வாங்குங்கள். உதாரணமாக அப்பா, அம்மாவுக்கு இடையில் முதல் குழந்தை படுத்து வந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பின் நிலைமை மாறும். பாலூட்ட மற்றும் பிற காரணங்களுக்காக, அம்மா புதுக்குழந்தையுடன் படுக்க வேண்டி வரும். அதுபோன்ற சூழலில், ‘நீயே சொல்லு… பாப்பாவை எங்கே படுக்க வைக்கலாம்?’ என்று முதல் குழந்தையிடமே கேட்டு, ‘அம்மா பக்கத்துல இல்லைன்னா பாப்பா நைட்டெல்லாம் அழும். நீங்க அதுகூடயே படுத்துக்கோங்க…’ என்று முதல் குழந்தையையே அந்த முடிவை எடுக்க வைக்க வேண்டும். மேலும் அது அப்படிச் சொல்லும்போது பாராட்டினால், பிற விஷயங்களிலும் அப்படி மெச்சூர்டு ஆக நடந்துகொள்ளும்.

யதார்த்தம் போதும்!

பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதில்லை. ஆனால், இன்றைய மாடர்ன் பேரன்ட்ஸ் புத்திசாலித் தனத்தை அவர்கள் மீது பயன்படுத்த நினைக்கிறார்கள். குறிப்பாக குழந்தை எதைச் செய்தாலும், இது சரியா, அசாதாரணமான பழக்கவழக்கமா என சந்தேகிக்கின்றனர். கூகுள் செய்து பார்க்கின்றனர். அது தேவையில்லை. யதார்த்தமாக இருங்கள். குழந்தையின் பழக்கவழக்கம் குறித்து ஏதேனும் சந்தேகம் தோன்றினால், நாம் எப்படி வளர்ந்தோம் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்… அது போதும்!”

– தெளிவு கிடைக்கச் செய்தன… பொன்னியின் வார்த்தைகள்!

Related posts

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்

nathan

கை குழந்தையை எப்படிக் கையாள்வது?

nathan

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

nathan

சுகப்பிரசவம் சாத்தியமா?

nathan

பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!!

nathan

கர்ப்பிணிகளுக்கு மசக்கை

nathan

வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?

nathan

சிசுவின் அசைவுகள்…

nathan

தாய்மார் தமது பாற்சுரப்புக் குறைவாக உள்ளது என்றெண்ணிக் கவலைப்படுகின்றீர்களா உங்களுக்கான தீர்வு இதோ

sangika