நீராவிக் குளியலுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முக்கோண வடிவ பெட்டியில் தலை மட்டும் வெளியே தெரியுமாறு உட்காரவைக்கப்பட்டு, பெட்டி மூடப்பட்டுவிடும். பெட்டிக்கு வெளியே தண்ணீர் சூடுபடுத்தப்பட்டு நீராவி மட்டும் பெட்டிக்குள் செலுத்தப்படும். பெட்டிக்குள் சுமார் 45 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை இருப்பது, சென்சார் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
நீராவியால் உடலில் உள்ள நீர்ச்சத்து, கழிவுகளோடு சேர்ந்து வியர்வையாக வெளியேறிவிடும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் 45 டிகிரி வெப்ப நிலையைத் தாங்க முடியாதவர்களுக்கு அவர்கள் உடல் தாங்கும் வெப்பநிலையில் சிகிச்சை தரப்படும். நீராவிப் பெட்டிக்குள் உட்காரச் செல்வதற்கு முன்பும், சிகிச்சை முடிந்த பிறகும் அதிக அளவு நீர் அருந்தவேண்டும்.
சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகக் குளிக்க வேண்டும். இதய நோய், ரத்த அழுத்தப் பிரச்னை, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த சிகிச்சையை எடுக்கக் கூடாது. நீராவிக் குளியல் உடல் உழைப்பு குறைந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்வாக்கும். உடலில் ரத்த ஒட்டம் சீராகும்.