25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
Hyderabadi Dum Biryani
சைவம்

சுவையான 30 வகை பிரியாணி

ஆஹா, என்ன மணம்… அடடா, என்ன ருசி!

கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்… அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்… ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு – மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, ஒரு `பிரியாணி மேளா’வையே இங்கு நடத்திக்காட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

 

சீஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 6 பல், துருவிய சீஸ் – அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

 

செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு… காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

வாழைப்பூ உருண்டை பிரியாணி

தேவையானவை – வாழைப்பூ உருண்டை செய்ய: வாழைப்பூ (மீடியம் சைஸ்) – ஒன்று, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, முந்திரி – 6, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

பிரியாணி செய்ய: பாசுமதி அரிசி – 2 கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா – ஒரு கைப்பிடி அளவு , வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக்கான அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டைகளை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.

தக்காளி – பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பனீர் துண்டுகள் – 150 கிராம், பச்சை மிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் – தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பனீர் துண்டுகளை சதுர சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மின்ட் – டொமேட்டோ பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பழுத்த தக்காளி – 8, புதினா – ஒரு கட்டு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், புதினா, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரண்டரை கப் நீர் சேர்க்கவும். நீர் நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பச்சைப் பட்டாணி – அரை கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயம், நாட்டுத் தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன்

பச்சைப் பட்டாணி, உப்பு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆனியன் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் ஸ்பைஸி ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி, தேங்காய்ப்பால் – தலா 2 கப், கேரட் – ஒன்று, பீன்ஸ் – 10, பச்சைப் பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – ஒன்று, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ – தலா ஒன்று, கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, பாதியளவு பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ ஆகியவற்றை தாளித்து… வெங்காயம், உருளைக்கிழங்கு, கரம்மசாலாத்தூள், அரைத்த கொத்தமல்லி விழுது, இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கீறிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

ரிச் மொகல் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) – ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி – 10, தயிர் – கால் கப், தனி மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா 2, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு, – தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்).

 

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்கறிகள், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, தயிர் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மூன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறவும். நன்கு ஆவி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பரிமாறும் முன் பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

சோயா கோலா பிரியாணி

தேவையானவை – சோயா கோலாவுக்கு: சோயா உருண்டைகள் – 20, பொட்டுக்கடலை – அரை கப், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பல், மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

பிரியாணி செய்ய: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா 3, பச்சை மிளகாய் – 5, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தேங்காய்ப்பால் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா கோலா செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில், சோயா உருண்டைகளை கொதி நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி, நீரை ஒட்டப்பிழிந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி, காயவைத்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில் வெங்காயம், தக்காளியை நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.

பாசுமதி அரிசியை நன்கு கழுவி தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை, மஞ்சள்

தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் ஊறவைத்த அரிசியை பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பிரியாணியை திறந்ததும் நன்றாக கிளறி சோயா கோலா உருண்டைகளை சேர்த்து, உடையாமல் கிளறினால்… சோயா கோலா பிரியாணி ரெடி. கேரட் ராய்த்தா, தயிர் – ஆனியன் பச்சடி இதற்கு சரியான காம்பினேஷன்.

டிரை ஃப்ரூட்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா (சேர்த்து) கால் கப், பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பால் – கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக் கொள்ளவும்).

 

செய்முறை: பாசிமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பிறகு, கழுவிய அரிசி, பால், ஒன்றே கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பாலில் கரைத்த குங்குமப்பூ, வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பரிமாறும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டை சேர்த்து நன்கு கிளறி, சூடாகப் பரிமாறவும்.

ஸ்பிரிங் ஆனியன் – கேஷ்யூ புலாவ்

தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, வெங்காயத்தாள் – சிறு கட்டு, தக்காளி – ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, மிகவும் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4 (கீறிக்கொள்ளவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

செய்முறை: சீரக சம்பா அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயத்தாள், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடித்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடித்த முந்திரி, நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, உதிராக வடித்த சாதம் நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

பெரிய நெல்லிக்காய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், நெல்லிக்காய் – 10, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: நெல்லிக்காய், இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு கரம்மசாலாத்தூள், தனி மிளகாய்தூள், உப்பு சேர்த்துக் கிளறி ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி, குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

ராஜ்மா – ஸ்பிரிங் ஆனியன் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், கறுப்பு ராஜ்மா – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, ஏலக்காய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

 

செய்முறை: கறுப்பு ராஜ்மாவை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வேகவைத்த ராஜ்மா, வெங்காயத்தாள், வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு குக்கரை மூடவும். ஆவி வந்ததும், `வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மக்காசோளம் புலாவ்

தேவையானவை: : பாசுமதி அரிசி – ஒரு கப், உதிர்த்து, வேகவைத்த மக்காச்சோளம் – ஒரு கப் வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – ஒன்று, முந்திரி – 4, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பிரிஞ்சி இலை, பட்டை, கீறிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கிராம்பு, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடிக்கவும்.

அடி கனமன வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… கீறிய பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்த சோளம், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

படாஃபட் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பூண்டு – பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி… நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், முந்திரி, பாதாம் – தலா 8, அன்னாசிப்பழம், ஆப்பிள் – தலா ஒரு துண்டு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 3, நெய், உப்பு – தேவையான அளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்.

 

செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அன்னாசிப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு பாதாம், முந்திரி சேர்த்து வறுக்கவும். இதனுடன் வடித்த சாதம், பழத்துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி, பாலில் கரைத்த குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து மேலும் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கோஸ் – பச்சைப் பட்டாணி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், கோஸ் – 100 கிராம், பச்சைப் பட்டாணி – 50 கிராம், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, தேங்காய்ப்பால் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: கோஸ், வெங்காயம், தக்களியை பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு, கோஸ், பச்சைப் பட்டாணி, தக்காளி, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும் இதனுடன் தேங்காய்ப்பால், இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். கேரட் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

கசகசா பாத்

தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி – 6, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, சீரகம் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: கசகசா, முந்திரியை ஊறவைத்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, அரைத்த கசகசா விழுது, உப்பு, ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். வெஜிடபிள் குருமாவோடு பரிமாறவும்.

பசலைக்கீரை புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பசலைக்கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துகேற்ப), இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: பசலைக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து லேசாக வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

கேப்ஸிகம் – மின்ட் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், குடமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாயை சதுர சதுரமாக கட் செய்யவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

மஷ்ரூம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், மஷ்ரூம் – 10 அல்லது 12, பெரிய வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு, சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து, மெல்லிய, நீளத் துண்டுகளாக கட் செய்யவும். வெங்காயத்தை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து, நன்கு வதக்கி… சோயா

சாஸ், சில்லி சாஸ், தேவையான உப்பு, மிளகுத்தூள் பாதியளவு வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு, இதனுடன் உதிராக வடித்த சாதம், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மீதமுள்ள வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

பச்சை மொச்சை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 4, பச்சை மொச்சை – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மொச்சையை நன்கு ஊறவைத்து, தோல் நீக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, பட்டை ஆகியவற்றை நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, மொச்சை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி, 3 கப் நீர் ஊற்றி, கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கேரட் ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

க்ரீன் ஆப்பிள் புலாவ்

தேவையானவை: சற்றே புளிப்பான க்ரீன் ஆப்பிள் – 2, சீரக சம்பா அரிசி – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: க்ரீன் ஆப்பிளை துருவிக்கொள்ள வும். சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ்சீரகம் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தயிரில் காராபூந்தி சேர்த்த ராய்த்தா இதற்கு சரியான இணை.

கொத்தமல்லி புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – அரை கப், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்), பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, பரிமாறவும்.

பச்சைப் பயறு – ஸ்பிரிங் ஆனியன் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பச்சைப் பயறு – அரை கப், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, வெங்காயத்தாள் – ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 4, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

 

செய்முறை: பச்சைப் பயறை 6 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, முளைகட்டவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, 2 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து, நன்கு கிளறி, குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆனியன் ராய்த்தாவோடு பரிமாறவும்.

நெய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 4, தேங்காய்ப்பால் – அரை கப், புதினா,

கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி – 10.

 

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்துக் கிளறவும். இதனுடன் தேங்காய்பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

மல்டி காய்கறி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 2, தக்காளி – 4, கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பீன்ஸ் – 8, காலிஃப்ளவர் – சிறிதளவு, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால், தயிர் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், ஏலக்காய், லவங்கம் – தலா ஒன்று, முந்திரி – 12, சின்ன வெங்காயம் – 4 (தோல் உரிக்கவும்), பிரிஞ்சி இலை – ஒன்று எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலையை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி… தேங்காய்ப்பால், 3 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியைப் போட்டு, ஆவி வந்ததும் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறவும்.

கோபி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 8 பல், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, தனி மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து, துண்டுகளாக்கவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல், லவங்கம், ஏலக்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தனி மிளகாய்த்தூள், அரைத்த மசாலா விழுது, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஆலு – மட்டர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பெரிய உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, பச்சைப் பட்டாணி – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, நெய்யில் வறுத்த முந்திரி, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னச் சின்ன சதுரங்களாக நறுக்கவும். புதினா, பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்துகொள்ளவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, உருளைக்கிழங்கு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (உருளைக்கிழங்கு வெந்ததா என்று நசுக்கிப் பார்க்கவும்). இதனுடன் வேகவைத்த பச்சை பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி, உதிராக வடித்த சாதம் சேர்த்து மேலும் கிளறி பரிமாறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

கொண்டைக்கடலை புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், வெள்ளை கொண்டைக்கடலை – கால் கப், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பட்டை – சிறு துண்டு, நெய்யில் வறுத்த முந்திரி – 8, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைக்கவும். தனியா, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பரிமாறவும்.

பிரிஞ்சால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2, சின்ன கத்திரிக்காய் – 6, பூண்டு – 8 பல், தனி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். சின்ன கத்திரிக்காயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து… பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், பூண்டு, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர் தெளித்து மூடி போடவும். கத்திரிக்காய் வெந்ததும் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

Related posts

சப்பாத்தி லட்டு

nathan

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி

nathan

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan

பொங்கல் அன்று செய்யப்படும் மஞ்சள் பூசணி மொச்சை பொரியல்

nathan

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

சுவையான பீர்க்கங்காய் மசாலா

nathan

சிம்பிளான… பாலக் பன்னீர் ரெசிபி

nathan

பனீர் கச்சோரி

nathan