இன்றைய நாளில் புற்றுநோயும், இதய நோய்களும் தான் அதிகளவில் ஏற்படுகிறது என்று நீங்கள் எண்ணினால், அது தவறு. ஆம், இந்த கார்பரேட் உலகில் மன அழுத்தம் காரணமாக தான் பலரும் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். டார்கெட், குறுகிய நேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும், மல்டி டாஸ்கிங் என ஒரு நபர் பத்து பேரின் வேலைகளை பார்க்கும் போது அவருக்கு தானாக மன அழுத்தம் வந்துவிடுகிறது
இதில் சோகமே என்னவெனில், தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என அவர்களுக்கே ஆரம்பத்தில் தெரிவதில்லை. இதனால், உடல் சோர்வு, இதய பாதிப்புகள், நீரிழிவு போன்றவை கூட ஏற்படலாம். இதனால், தென்கொரியாவில் பல ஊழியர்கள் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். இதற்கு தீர்வுக் காண வேண்டும் என்பதற்காக தான் ஓர் நிறுவனம், கல்லறை சிகிச்சை என்ற புதுமையான ஒன்றை அறிமுகம் செய்தது….
கல்லறை சிகிச்சை
தற்கொலை எண்ணம் மனதைவிட்டு விலக வேண்டும். வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்ற ஒன்று என்பதை ஊழியர்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் இந்த கல்லறை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
சவப்பெட்டி
ஸ்டீவ் ஈவன்ஸ் என்பவர் தனது நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு தற்கொலை எண்ணம் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த கல்லறை சிகிச்சையை தொடங்கினார். குறிப்பிட்ட நாட்களில் ஊழியர்கள் அனைவரும் ஓர் அறைக்கு அழைத்துவரப்படுவார்கள். அந்த அறையில் சவப்பெட்டி போன்ற வடிவமுள்ள பேட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
10 நிமிட உறக்கம்
அந்த பெட்டியில் அவர்களை பத்து நிமிடம் படுக்க வைத்து, முழுமையாக பெட்டியை மூடிவிடுவார்கள். அந்த அறை முழுக்க இருள் சூழ்ந்து இருக்கும். பத்து நிமிட நிசப்த நிலைக்கு பிறகு அவர்கள் எழுப்பிவிடப்படுவார்கள்.
ஊழியர்களின் கருத்து
இந்த பத்து நிமிட கல்லறை சிகிச்சைக்கு பிறகு ஓர் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. வாழ்க்கையின் மதிப்பையும், என் உறவுகளின் அன்பையும் இழந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுகிறது என ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊக்கம் பிறக்கிறது
இந்த சிகிச்சை மேற்கொண்ட பிறகு, என் வேலை மீதும், என் குடும்பத்தின் மீதும் ஊக்கம் அதிகரிக்கிறது. நல்ல முறையில் உழைக்கிறேன், என் குடும்பத்தார் உடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன் எனவும் ஊழியர்கள் கூறுகிறார்கள். இது ஓர் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் பலர் கூறுகின்றனர்.
பார்க் சுன்
ஸ்டாஃப் இன்கார்ப்பரேஷன் (Staff Inc) நிறுவனத்தின் தலைவர் பார்க் சுன், “என் ஊழியர்கள் நல்ல நிலையில் உழைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் விலக வேண்டும். கல்லறை சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை கண்ட எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அனைவரின் மனநிலையும் நேர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.
சிரிப்பு சிகிச்சை
மேலும் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சிரிப்பு சிகிச்சையும் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் அனைவரும் அலுவலகம் வந்தவுடன். மேலதிகாரியுடன் சேர்ந்து எழுந்து நின்று சிரித்து, கைத்தட்டி தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் அவர்களது மன அழுத்தம் குறைந்துவிடுகிறது.
வேலை நேரத்திற்கு இடையே உடற்பயிற்சி
மேலும் பல கொரிய நிறுவனங்கள் அலுவலக நேரத்திற்கு நடுவில் தங்கள் ஊழியர்கள் கட்டாயம் சிறு சிறு உடற்பயிற்சிகளை, அவரவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்யும் வண்ணம் பயிற்சி அளிக்கிறது. இவை அனைத்தும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.