நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான கோழி குழம்பை செய்ய நினைத்தால், கொங்கு நாட்டு கோழி குழம்பை செய்யுங்கள்.
சரி, இப்போது அந்த கொங்கு நாட்டு கோழி குழம்பின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு…
சின்ன வெங்காயம் – 5-6
வரமிளகாய் – 6-7
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
கிராம்பு – 3-4
பட்டை – 1 இன்ச்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லித் தூளைத் தவிர அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் மல்லித் தூளை சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொங்கு நாட்டு கோழிக் குழம்பு ரெடி!!!