வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களில் தங்கி அவஸ்தைப்படுவோர் அதிகம். அதிலும் எப்போதும் ஹோட்டல் சாப்பாட்டினை சாப்பிட்டு பலரும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் வெளியூர்களில் வீடு எடுத்து தங்கியிருந்தால், சிம்பிளாக சாதம் வைத்து, வெங்காய சாம்பார் செய்து சாப்பிடலாம்.
இங்கு பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடும் படியான வெங்காய சாம்பார் எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
சாம்பார் பொடி – 1 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியைப் போட்டு, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்து, அதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வெங்காய சாம்பார் ரெடி!!!