துர்க்மெனிஸ்தானிலுள்ள “நரகத்தின் வாயில் (Door to Hell )என்று அழைக்கப்படும் 50 வருடங்களாக இடைவிடாமல் எரிந்து வரும் குழியை மூட அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
எண்ணெய் வளம் நிரம்பிய துர்க்மெனிஸ்தானில் டார்வாசா என்ற கிராமத்தில் காணப்படும் இக்குழியானது 70 மீற்றர் சுற்றளவும் 66 அடி ஆழமும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழியானது 1971 ஆம் ஆண்டு சோவியத் அரசின் எண்ணெய் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட தவறால் உருவாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
இந்நிலையில் இக்குழியில் இருந்து அண்மைக்காலமாக அதிகளவில் மீத்தேன் வாயு வெளியேறுவதால், அருகாமையில் இருக்கும் ஊர்களுக்கு மீத்தேன் வாயு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக் குழியை மூட அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
இக் குழியானது சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்தாலும், துர்க்மெனிஸ்தானிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.