Other News

நம் ஆண்டவர் இயேசு உண்மையின் வடிவமானவர்

நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு உலகிற்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. வெறுப்பும், வன்செயலும் கோலோச்சும் உலகில் அது ஓர் இறைவாக்கினரின் பிறப்பு. உண்மை விளம்பியவரின் பிறப்பு. இறைவனை தவிர வேறு எவருக்கும் மண்டியிடாத மாவீரத்தின் பிறப்பு. இயேசுவின் பிறப்பு உலகையே கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரிக்கச் செய்தது. அத்தகைய பேராளுமைக்கும், பேரன்பிற்கும் முன்னெடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமானார்.

எது நடந்தாலும் அவர் இறை நம்பிக்கையில் தளர்வுறாதிருந்தார். வன்முறைக்கு அன்பினால் பதிலுரைத்தார். தீமை புரியும் பகைவரையும் நேசிப்பது எப்படி என்று நமக்கு கற்றுத் தந்தார். கெத்சமனி தோட்டத்தில் நாம் வன்முறையை அகற்றி வாழ்தலின் தேவையை வலியுறுத்தினார். நம் கடவுள் அன்பின் கடவுள். சுதந்திரத்தின் கடவுள். வாழ்வின் கடவுள். மன்னிப்பின் கடவுள் என்பதை தெளிவுபடுத்தினார். தன்னலம் துறத்தலே சிறந்த ஜெபம், வாழ்வின் வரம் என்றார்.

இயேசு உண்மையின் வடிவமானவர். இயேசுவை மீட்பராக ஏற்கும் நாம் எத்தனை பேரை மீட்டுள்ளோம்? எத்தனை பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளோம்? ஒரு கிறிஸ்தவன் என்று யாரும் இருக்க முடியாது, இருந்தால் அவர் கிறிஸ்தவன் கிடையாது என்றார் மார்ட்டின் லூதர். இயேசு ஒரே மனமும் ஒரே வாழ்வும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்திற்கு உரியவர். தனித்தனியே வந்து, தனித்தனியே சாமி கும்பிட்டுவிட்டு, தனித்தனியே சென்று விடுவதற்கு பெயர் கிறிஸ்துமஸ் அல்ல.

தேவைக்கு மேல் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் உணவு பசித்திருப்போருக்குரியது. பயன்படுத்தாமல் நீங்கள் அடுக்கி வைத்துள்ள ஆடைகள் ஆடையின்றி இருப்போருக்கு உரியது. வீணே இடத்தை அடைத்துக் கிடக்கும் உங்கள் காலணிகள் வெறும் காலோடு நடப்போருக்குரியன. யாருக்கும் பயன்படாமல் நீங்கள் பதுக்கி வைத்துள்ள பணமும், மறைத்து வைத்துள்ள செல்வமும் ஏதும் இன்றி வாடும் ஆதரவற்றோருக்குரியது. சுருங்கச் சொல்வதென்றால் தேவையில்லாமல் நீங்கள் வாங்கிக் குவிக்கும் உங்களின் தேவைகள் யாவும் எங்கோ யாருக்கோ அடிப்படைத் தேவையாக பயன்படக் கூடியவை. அந்த யாரோ தான் நமக்கு அருகில் நமக்காக காத்துக் கிடக்கும் கடவுள். மனுவுரு எடுத்தார் கடவுள் என்றால் மனிதர் ஒவ்வொருவரும் கடவுள் உருவில் இருப்பவர் தான். எனவேதான் நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள கனவை நாம் நிறைவேற்றுவோமா?விண்ணரசை கொண்டு வருவோமா? மண்ணுலக மாந்தருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருவோமா? தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் உப்பாகவும், ஒளியாகவும், உரமாகவும், வரமாகவும் இருப்போமா? ஏழைகளின் தோழமையிலும் ஆதரவற்றவர்களின் புன்முறுவல்களிலும் நமது சாயல் வெளிப்படுமா? கடவுளிடம் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பெயர் ஜெபம் அல்ல. அவரை சந்திப்பதே ஜெபம். அவரோடு இணைந்து அனைவரையும், அனைத்தையும் மீட்க போராடுவதும் மாற்றங்களை கொண்டு வருவதும் தான் ஜெபம் என்பதை உணர்வோமா?

யூதர்கள் யூத மெசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைவரின் இதயங்களையும் அன்பால் நிரப்பிட உலக மெசியாவாக அவர் உருவெடுத்ததை நாம் உணர்கிறோமா? மனுவுரு என்பதையும், மனுமகன் என்பதையும் நாம் மானுடத்தின் மகுடங்களாக பார்க்கின்றோமா? மனிதனாக பிறந்தும் மனிதராக வாழ முடியாத ஏழைகள் வாழ்வதற்காக பிறப்பெடுத்தவரே இயேசு என்ற எளிய உண்மையை நம் நெஞ்சில் தாங்கி நிற்போமா? இன்று புதிதாக பிறக்கும் ஒவ்வொருவரிலும் இயேசு பிறக்கிறார்.

மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி

திண்டுக்கல் மறைமாவட்டம்.

Courtesy: MaalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button