வாரம் ஒருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அத்தகையவர்கள் கொள்ளு உருண்டை குழம்பு சமைத்து சாப்பிட்டால், பின் கொள்ளு சாப்பிட மறுக்கமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் கொள்ளு மிகவும் சுவையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த கொள்ளு உருண்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Kollu Urundai Kuzhambu Recipe
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் – 1-2
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
வறுத்து அரைப்பதற்கு…
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
கறிவேப்பிலை – 1 கையளவு
மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கொள்ளுவை நன்கு கழுவி, சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் ஊற வைத்துள்ள கொள்ளுவில் உள்ள நீரை வடித்து, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து ஓரளவு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, குழம்பில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி 15 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு ரெடி!!!