தினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் உடலில் சூடு அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இந்த கீரை உடலின் வெப்பத்தைத் தணிக்கச் செய்யும். மேலும் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவையும் குணமாகும்.
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு மணத்தக்காளி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். சரி, இப்போது மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1/2 கப்
தேங்காய் – 1 மூடி (அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்)
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கீரையுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்தால், மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி!!!