வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. அதிலும் தற்போதுள்ள காய்கறிகளின் விலையுடன் ஒப்பிடுகையில், கீரைகளின் விலை குறைவு என்பதாலும், காய்கறிகளை விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை அடக்கியுள்ளதாலும், இதனை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதுவும் வெந்தயக்கீரையில் எண்ணிடலங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அவ்வப்போது உணவில் சேர்ப்பது நல்லது.
இப்போது வெந்தயக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து எப்படி கடைந்து சாப்பிடுவதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த கீரையை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
Quick Methi Dal Recipe
தேவையான பொருட்கள்:
வெந்தயக் கீரை – 1 கட்டு
துவரம் பருப்பு (அ) பாசிப்பருப்பு – 2 கப்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 3-4
கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 5-6 பற்கள்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சீரகம் சேர்த்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் வெந்தயக் கீரையை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை கடைந்து சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், வெந்தயக் கீரை பருப்பு கடைசல் ரெடி!!!