”இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்” என்கிறார் உடற்பயிற்சியாளர் டேனியல்.
மேலும், ”இங்கு தரப்பட்டுள்ள உடற்பயிற்சிகள் அனைத்தும், உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்’ என்கிறார் டேனியல்.

காஃபின் க்ரஞ்சஸ் (coffin crunches)
தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளையும் மடக்கவும். தலை மேல் நோக்கி இருக்கட்டும். கைகளை இரண்டு பக்கத்திலும் ஊன்றிக்கொள்ளவும். கைகளை நன்றாக ஊன்றியபடியே, தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்கவும். முட்டிகள் மடக்கிய நிலையிலேயே இருக்கட்டும். ஓரிரு விநாடிகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15முறை செய்ய வேண்டும்.

சைடு க்ரஞ்சஸ் (Side crunches)
தரையில் நேராகப் படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் சமமாக நீட்டிக்கொள்ளவும். இரண்டு கைகளையும் தலையின் பின்னால் கட்டிக்கொள்ளவும். வலது காலின் மேலே இடது காலை வைக்கவும். தலையை லேசாக உயர்ந்து இருக்கட்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்பவும். அதேபோல், இடது காலின் மேலே வலது காலை வைக்க வேண்டும். இப்படி பதினைந்து முறை இரண்டு கை கால்களையும் மாற்றி மாற்றி செய்யுங்கள்.
லெக் ரைஸ் (leg raise)

தரையில் நேராகப் படுக்கவும். கைகள் இரண்டும் பின் பக்கமாக மடக்கிய நிலையில் இருக்கட்டும். ஒரு கால் மீது மற்றொரு காலினை வைத்தபடி, இரண்டு கால்களையும் 90 டிகிரி கோணத்தில் மேலே உயர்த்தவும். பிறகு, இரண்டு கால்களையும் தரையைத் தொடாதவாறு மேலும் கீழுமாக கால்களை ஏற்றி இறக்கவும். இதுபோல் தொடர்ந்து 15 முறை, செய்யவும். தொடர்ந்து செய்ய முடியாதவர்கள், சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் செய்யலாம்.
ட்விஸ்டர் க்ரஞ்சஸ் (Twister crunches)

இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.
அப்டாமினல் ஸ்ட்ரச் (Abdominal stretch)

தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும். மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும். சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும். எல்லா உடற்பயிற்சிகளும் செய்து முடித்ததும், இந்தப் பயிற்சியை கடைசியாகச் செய்யவும்.