25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
teen pregnancyy
பெண்கள் மருத்துவம்

“இளவயதுக் கர்ப்பமும்” அதன் வேதனைகளும்

அண்மைக் காலமாக வட மாகாணத்தில் பெண் பிள்ளைகள் இளவயதில் கர்ப்பமடைவது அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இளம் பராயத்தில் (ரீன் ஏய்ச்) இருக்கும் பெண் பிள்ளை ஒருவர் தனது 19 வயது நிறைவடைவதற்கு முன்னர் கர்ப்பம் தரித்தல் என்பது “இளவயதுக் கர்ப்பம்” என அழைக்கப்பெறுகின்றது.

பல சமூக கட்டுப்பாடுகளுடன் தனித்துவமான பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இம் மாற்றம் வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது. இவ்வாறு இளவயதில் கர்ப்பம் அடைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

தற்போது யாழ்.குடாநாட்டில் இளவயதில் கர்ப்பம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இந்தப் பெண்பிள்ளைகளின் பெற்றோரே முக்கிய காரணம் என யாழ் பல்கலைக்கழக மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் மூத்த விரிவுரையாளரும் ஆலோசகருமான க.முகுந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு பாலியல் தொடர்பான அறிவு போதியளவு இல்லாமையும் மற்றும் பெண் பிள்ளையின் தாயார் மனம் விட்டு பெண் பிள்ளைகளுடன் பேசாமை போன்ற காரணங்களால் தனக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை, மாற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. இதனாலேயே உலகத்தைப் புரிந்து கொள்ளாத 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட தாக்கங்களும், பெரும் மாற்றங்களும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்றைய இளம் தலைமுறை சிறிய வயதிலேயே கணினி மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பதாலும், இளம் வயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாகிறார்கள். இன்றைய பள்ளிகளில் மிகப்பெரும் சவாலாக இருப்பது, கல்வியைவிட, இத்தகைய பாலினக் கவர்ச்சியும், அதைத் தொடர்ந்த காதலும் காமமும்தான். அதனால் இளைஞர்களும், யுவதிகளும் தூண்டப் பெற்று பலாபலன்களையும், பாதுகப்பான முறையையும் அறியாது இரகசிய உடலுறவு கொள்வதன் மூலம் இளவயது கர்ப்பம் அதிகரிக்க காரணமாகின்றது.

அத்துடன், பாடசாலைப் பருவத்தில் தோன்றும் நன்மை தீமை அறியாத பருவக் காதலை உண்மைக் காதல் என தவறாக புரிந்து கொண்டு செயல் பெறுவதாலும், போதைப் பொருள் முதலியவற்றின் அடிமையாகி அதன் போதையில் தவறாக நடப்பதனாலும் இளவயது கர்ப்பம் அதிகரிக்க காரணமாகின்றது.

மேலும் வட மாகாணத்தில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுவதால். தாய் தொழிலுக்காக வெளியே செல்ல வயதுக்கு வந்த பிள்ளைகள் தனியாக இருக்கும் சூழ்நிலைமையும் அங்கு இளவயது கர்ப்பமும் அதிகரித்து காணப்படுகின்றமைக்கு காரணமாகி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அவை மட்டுமன்றி இளம் பெண்கள் தனியாக இருக்கும்போது பாலியல் அத்துமீறல்கள் மூலமும் இளம் கன்னிகள் கர்ப்பமாகும் சந்தற்பங்களும் அதிகமாக காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்னும் ஒரு சிலர், வறுமை காரணமாகவும்; உற்றார், உறவுகளற்ற நிலையில் தனிமையாக வாழ்வதும்; சந்தற்பம் சூழ்நிலையால் காதல் என ஏமாறுதலும், உதவி செய்தோருக்கு உபகாரமாகவும். தம் உடலை வழங்கி தாமும் கர்ப்பமாகி வாழ்வை இழப்பதோடு தமது குடும்பத்திற்கும் கெட்ட பெயரை வாங்கி விடுகின்றார்கள்.

வெளிநாடுகளில் பாலியல் சம்பந்தமான விளிப்புணர்வு இளம் பராயத்திலேயே கற்பிக்கப் பெறுவதுடன், அங்கு காணப்பெறும் கலாச்சாரம், பண்பாடு அவர்களை ஒதுக்கி வைப்பதில்லை. அத்துடன் பாதுகாப்பான கலவி முறை பற்றியும் அவர்களுக்கு விப்புணர்வு ஏற்படுத்தப் பெற்றுள்ளன. மேலும் இளவயதினர் கர்பமாகி விட்டால் அதனை இல்லாது செய்வதற்கும் வசதிகள் காணப்பெறுகின்றன. எனவே வெளிநாடுகளில் இளவயதுக் கர்ப்பம் பிரச்சனையாக இருந்தாலும்; மிகப் பெரிதாக தாக்குவதில்லை என்றே சொல்லலாம்.

இளவயது கர்ப்பம் தரித்தல் காரணமாக படித்து பட்டம் பெறக்கூடிய தகமையில் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாதவர்களாகவும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கி சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாது வீட்டினுள் முடங்கிக் கிடந்து மனநோயாளியாகி தற்கொலை முயற்சி செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அல்லது எதிர்காலத்தை சூனியமாக்குகின்றார்கள்.

யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 44 வைத்தியசாலைகள் உள்ளன. குறித்த வைத்தியசாலைகளில் 2009ஆம் ஆண்டு 18வயதிற்கும் குறைந்த 373 பெண்களும், 2010ஆம் ஆண்டு 464 பெண்களும், 2011ஆம் ஆம் ஆண்டு 440 பெண் பிள்ளைகளும், 2012ஆம் ஆண்டு 419 பெண் பிள்ளைகளும், கடந்த ஆண்டு 318 பெண் பிள்ளைகளும் இளம் வயதில் கர்ப்பம் தரித்து அனுமதிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவிக்கின்றது.

யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 2013ஆம் ஆண்டு 318 பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரித்திருந்ததாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 44 வைத்தியசாலைகள் தவிர, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையும் அங்குள்ளது.

கடந்த ஆண்டு ஆண்டு (2013) ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் 18 வயதிற்கு உட்பட்ட 190 பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு (2014) ஜனவரி மாதத்தில் மாத்திரம் யாழ். போதனா வைத்தியசாலையின் 18 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 20 ஆம் வாட்டில் 11 பெண் பிள்ளைகளும், 21 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 22 ஆம் வாட்டில் 01 பெண் பிள்ளையும் இளவயது கர்ப்பத்துடன் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இந்தப் பிரச்சினை வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

யாழ். மாவட்டத்தில் யௌவன பருவத்திற்கான சிகிச்சை நிலையங்கள் ஊடாக பெண் பிள்ளைகளுக்கு திருமணத்தை பிற்போடுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர்கள் இளவயதில் திருமணம் செய்தாலும் குழந்தைப் பேற்றினை பிற்போடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இத்தகைய ஆலோசனைகள் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் சமூகத்தில் நிலவுகின்றது. வடமாகாணத்தில் பெரும் சமூகப் பிரச்சினையாக காணப்படுகின்ற இளவயது கர்ப்பம் தொடர்பான விவகாரம் குறித்து சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சு ஆகியன அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். அத்துடன் ஊர்ச் சனசமூக நிலையங்கள், பாடசாலைகள் ஊடாகமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கட்டாயாமாகின்றது.

இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், பெண் பிள்ளைகளினதும் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகவுள்ளது.

பெண்கள் சமூகத்தில் கேள்விக்குறிகளாக மாறுவதை தடுத்து நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
teen pregnancyy

Related posts

பெண்களே அவதானம் உங்களுக்கு இவ்வாறான அறிகுறி உண்டா?

sangika

சிறு முயற்சி.,கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! பெரிய ஆரோக்கியம்..!!

nathan

வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை

nathan

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

nathan

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்..

nathan

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் கற்றாழை

nathan

பெண்களின் வயிற்று கொழுப்பு காரணம்

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

எடைகுறைந்த குழந்தையின் உணவு முறை

nathan