இன்றைய காலத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பதால், அவை மக்களிடையே பரவி உயிரை பறிக்கும் அளவிலான நோய்களை உண்டாக்குகிறது. இப்படி உடலை தாக்கும் கிருமிகள் முதலில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையிழக்கச் செய்யும். நோயெதிர்ப்பு சக்தி வலிமையிழந்தால், உடல் ஆரோக்கியம் முற்றிலும் மோசமாகிவிடும். ஆகவே தினமும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு வருவதோடு, வாழ்க்கை முறையிலும் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
மாற்றங்கள் என்றதும் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றங்களும் செய்ய தேவையில்லை. மிகவும் சிம்பிளான, அனைவராலும் பின்பற்ற கூடியவாறே இருக்கும் மாற்றங்களை செய்தாலே போதும். இத்தகைய மாற்றங்களால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிப்பதோடு, உடலும் வலிமையாகும். சரி, இப்போது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க உதவும் சில எளிய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
உடற்பயிற்சி
தினமும் தவறாமல் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். இப்படி உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, கொழுப்புக்களை கரைத்து, செரிமானத்தை அதிகரித்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
பிடித்த இசையை கேளுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பாட்டு பிடிக்கும். இப்படி பிடித்த இசையை கேட்பதன் மூலம், மனம் சந்தோஷேமாகவும், அமைதியாகவும் வைத்து, அதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும்
மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை வந்தால், அதனால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாமல் போய், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், அதனால் நீரிழிவு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படுவதோடு, சரியான உணவில்லாததால் விரைவில் மரணத்தைக் கூட சந்திக்கக்கூடும்.
வேடிக்கையான நண்பர்
மிகவும் வேடிக்கையான நண்பரை அழைத்து, அவருடன் நேரம் செலவழியுங்கள். இதனால் அவர் செய்யும் வேடிக்கையால் வயிறு வலிக்க சிரிப்பதோடு, உடலில் உள்ள வெள்ளையணுக்கள் சுறுசுறுப்புடனும் இருக்கும்.
சிகரெட்டை தவிருங்கள்
புகைப்பிடிப்பவர்களுக்கு தான் அதிக அளவில் காய்ச்சல், நிம்மோனியா போன்றவற்றின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரையை இழக்கக்கூடும். மேலும் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும், இருமல், காய்ச்சசல் போன்றவை தாக்கக்கூடும். ஆகவே புகைப்பிடிப்பதையோ அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.
போதுமான அளவு தூக்கம்
தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, முகம் பிரகாசமாக இருக்கும்.