ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துகிறீர்களா? அது ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகளை தெரிந்துக் கொண்டால், இனி மறந்து கூட அந்த தவறை செய்யமாட்டீர்கள்.
சுட்ட எண்ணெய்யை வீணாக்க விரும்பாததால் நாம் இதைச் செய்கிறோம். பொருட்களை வீணடிக்கக்கூடாது என்ற நம்முடைய இந்த சேமிப்பு ஆசை உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
எண்ணெய்யை கொதிக்க வைக்குபோது நச்சுகள் வெளியேறும். கொதிக்கும் எண்ணெயில் உணவுப் பொருட்களை பொறித்து எடுத்துவிட்டு ஆற வைத்து விடுகிறோம்.
அப்போது அந்த எண்ணெய்யில் நச்சுகள் படிந்திருக்கும். அதை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது, அதில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் உடைந்து போகத்தொடங்கும்.
அதனால், எண்ணெய்யின் மணம் மாறிப் போகும். இதை நீங்கள் வீட்டிலேயே சோதித்துப் பார்க்கலாம். சுட்ட எண்ணெய்யின் மணமும் நிறமும், முதல் முறை கடையில் இருந்து வாங்கும் எண்ணெயுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, சுட்ட எண்ணெயால் சமைக்கப்பட்ட உணவுக்கும், புதிதாக பயன்படுத்தப்படும் எண்ணெயில் சமைக்கப்படும் உணவுக்கும் உள்ள சுவையில் வித்தியாசம் இருக்கும். சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது, உணவின் தரம் மற்றும் சுவையை மட்டுப்படுத்துவதோடு, உடலுக்கு தீங்கும் ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். இதற்குக் காரணம், எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவதன் மூலம், அந்த எண்ணெயில் free radicals வளரத் தொடங்குகின்றன. அதோடு எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்துவிடும்.