‘முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?’ என்று, அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ”முகத்துல ஏன் கருப்புத் தட்டியிருக்கு? கண்ணுக்குக் கீழே கரு வளையமா? ஐய்யய்யோ நமக்கு வயசாயிடுச்சா! சுருக்கமா இருக்கே. என்ன பண்ணலாம்..?” – இப்படி, கேள்விகள் கிளம்பிவந்து கவலை ரேகையை அதிகரிக்கும்.
”கவலையை விடுங்க… கைவசம் இருக்கு இயற்கை முறை ஃபேஷியல்” என்கிறார் பியூட்டிசியன் ரேணுகா செல்லதுரை, ”பொதுவாகவே பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. அதனால் பயப்படாமப் பண்ணுங்க!” என்கிறார். என்னென்ன பழங்களைக்கொண்டு ஃபேஷியல் செய்யலாம்?
ஆப்பிள்
ஆப்பிள் பாதி, சிறிது அவகடோ பழம் இவற்றை நன்றாக மசித்து மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கழுவ வேண்டும். இது முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுபடுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால், முகம் எப்போதும் பிரகாசமாக மின்னும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.
பப்பாளி பழம்
திருமணம் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும்போது, பப்பாளி ஃபேஷியல் செய்துகொள்வது பெஸ்ட். பப்பாளிப்பழக் கூழ், வாழைப்பழக் கூழ், ஒரு கேரட், மூன்று ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு அலசலாம். காலை முதல் மாலை வரை பளிச்சென முகம் பிரகாசமாக இருக்கும்.
ஆரஞ்சு
இதில் உள்ள சிட்ரிக் ஆசிட் முகத்துக்குப் பளபளப்பை உண்டாக்கும். வெறும் ஆரஞ்சு சாற்றை மட்டும் ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவினால் போதும். முகத்தில் உள்ள கருமை மறைந்து, ஒரே மாதிரியான சீரான நிறத்தைத் தரும். மூக்கின் மேல் வரும் வெள்ளை, கருப்பு புள்ளிகளைச் சரிப்படுத்தும்.
பேரீச்சம் பழம்
பேரீச்சம் பழத்துடன் சிறிது எலுமிச்சை, சாற்றைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி, 10 நிமிடம் வைத்திருந்து கழுவவும். நன்கு காய்வதற்கு முன்பு எடுத்துவிடவேண்டும். ப்ளீச் செய்தது போல் முகம் பளிச்செனக் கோதுமை நிறமாக மாறும்.