இதுவரை எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். இப்போது பார்க்கப் போவது வங்காளத்தில் மிகவும் பிரபலமான சிக்கன் ரெசிபியான சிக்கன் கஸ்ஸாவை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியில் நிறைய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுவதால், இது நிச்சயம் அருமையான சுவையில் இருக்கும்.
அதிலும் இது விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற வித்தியாசமான ரெசிபி. சரி, இப்போது அந்த சிக்கன் கஸ்ஸாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Irresistible Chicken Kassa Recipe
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
ஊற வைப்பதற்கு…
தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 5-6 (அரைத்தது)
உப்பு – தேவையான அளவு
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
கிரேவிக்கு…
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4-5 (அரைத்தது)
சீரகப் பொடி – 3 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4-5
ஏலக்காய் – 3-4
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் மஞ்சள் தூள், அரைத்த சிவப்பு மிளகாய், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றம் சர்க்கரை ஆகியவற்றை 1/2 கப் தண்ணீரில் கலந்து, வாணலியில் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு மற்றும் தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 8-10 நிமிடம் நன்கு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியில் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், சிக்கன் கஸ்ஸா ரெடி!!!