பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.
பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.
கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும். வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?
ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே… அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ… அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்!