இன்றைக்கு, 40 வயதை கடந்த, 80 சதவீதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. அதற்கு உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே காரணமாகும். அப்படியே வேலை செய்தாலும், பெரும்பாலானவர்கள் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர். இதனால், உடல் எடை அதிகரித்து மூட்டுவலிக்கு வழி வகுக்கிறது. பாஸ்ட்புட் போன்ற நவீன உணவு பழக்கத்தில் ஆர்வம் காட்டுவதால், உணவை கட்டுப்படுத்த முடியவில்லை. மூட்டுவலிக்கு மருந்து, மத்திரைகள் தற்காலிகமான தீர்வை தருகிறதே தவிர, நிரந்தர நிவாரணத்தை தருவதில்லை.
மூட்டுவலியை பொறுத்தவரை, இயற்கை வழியான மருந்து மற்றும் உணவு முறைகள் வாயிலாக நல்ல பலன் கிடைக்கும். அவற்றை குறித்து பார்க்கலாம்:
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும். வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து சூடாக்கி, மூட்டுவலியுள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். நொச்சி இலைச் சாற்றை மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால், வலி குறையும். வில்வ மர இளந்தளிரை வதக்கி, இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை, சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவலாம். பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும். புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தை கழுவி வந்தால், மூட்டுவலி குறையும்.
குப்பைமேனி இலைகளை, நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சை சாறு கலந்து மூட்டின் மேல் பூசினால் வலி குறையும்.
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்ச்சி, ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீரில் கழுவினால் வலி தீரும். கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து, வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குணமாகும்.
கை, கால் வலிக்கு காலையில் சிறிதளவு தேனும், அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையை மை போல் அரைத்து, சிறிதளவு பசும்பாலில் கலந்து, காலையும் மாலையும் சாப்பிட்டால், கை, கால் வலி பறந்து போகும்.
தக்க மருத்துவர் ஆலோசனையுடன், இந்த சிகிச்சைகளை பெறுவது பாதுகாப்பானது.