Courtesy: BBC Tamil
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் காணாமல்போன 10 சவரன் நகையை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்ட நபர் தனது சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இ
வ்வாறு செய்து வருபவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
“ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் பரமக்குடி பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ். பட்டதாரி இளைஞரான இவர் ஒரு விளம்பர பிரியர். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்,” என்று பிபிசியிடம் பேசிய காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் விக்னேஷ் அழைப்பில்லாமலே கலந்து கொள்வார். அப்படி கலந்து கொள்ளும் விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி தாமாகவே மாட்டி கொள்வார்.
சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விக்னேஷ் அவரது மகள் கழுத்தில் இருந்த வைர நெக்லஸை திருடிச் சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினரால் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் இவரது திருட்டு சம்பந்தபட்ட செய்திகள் வெளியாவதை சேகரித்து விளம்பரத்திற்காக அதனை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார்.
விக்னேஷ் மீது மதுரை, சென்னை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஆனால் தன் மீது வழக்குகள் உள்ளதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தனது புல்லட்டில் பந்தாவாக அவரது சொந்த ஊரான பரமக்குடியில் வலம் வருவார்.
சமீபத்தில் நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாகத் தொடர்பில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் விக்னேஷ்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில் 10 பசவரன் நகை திருட்டு போனது.
இது குறித்து விசாரித்த மதுரை காவல்துறையினர் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்த ட்ரோன் கேமரா வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விக்னேஷின் செயல்பாடுகள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரிக்க மதுரை தனிப்படை போலீசார் பரமக்குடியில் உள்ள விக்னேஷின் வீட்டிற்கு திங்கள்கிழமை இரவு சென்றனர். அங்கு அவரது பெற்றோரிடம் விக்னேஷ் குறித்து கேட்டதற்கு அவன் வீட்டில் இல்லை என மறுத்துள்ளனர்.
பிறகு வீட்டிற்குள் புகுந்த காவல்துறையினர் அங்கு தனி அறையில் ஒளிந்திருந்த விக்னேஷை கைது செய்தனர்.
பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் நகையைத் திருடியதை விக்னேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து விக்னேஷ்யை கைது செய்து மதுரை அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நன்கு வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுதுபோக்கிற்காகவும், தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது பரமக்குடி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “விக்னேஷ் நகை பணத்தை திருடும் ஒரு நபராக தெரியவில்லை. இவர் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக கடந்த காலங்களில் இவ்வாறு பல இடங்களில் நகைகளை திருடி மாட்டிக் கொண்டுள்ளார். குற்றம் குறித்து செய்திதாள்களில் வரும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி அதிலும் விளம்பரம் தேடும் ஒரு நபராக இருந்துள்ளார்.
விக்னேஷ் அவ்வப்போது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து தனது அப்பாவிற்கு ஃபோன் செய்து செய்தித்தாளில் தன்னை காணவில்லை என புகைப்படத்துடன் விளம்பரம் கொடுக்க சொல்வாராம் அந்த அளவு விளம்பரப் பிரியராக ஆக இருந்து வந்துள்ளார்,” என்று தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் விக்னேஷின் பெற்றோருக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்தார்.