ஐ.டி.., தொழில்நுட்பப் பூங்கா என காலரைத் தூக்கி சொல்லும்படியான இடத்தில் வேலை செய்யும் பலர் அடிக்கடி தலையை சொறிந்தபடி சொல்வது, “மச்சான் தூக்கமே வரமாட்டேன்குதுடா..” ஆம்! இவர்கள் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினருக்கு தூக்கம் என்பது கடவுள் தரும் வரம் போல ஆகிவிட்டது, எப்போது கிடைக்கும் என தவம் கிடக்கின்றனர்.
ஏன், இப்படி தூக்கமின்மை பிரச்சனை பலருக்கு ஏற்படுகிறது? இந்த கேள்வி இன்று பலரது மனதினுள் ஓடிக்கொண்டிருகிறது. பதில் அவர்களது கைகளிலேயே இருக்கிறது. நாம் நமது உடலிற்கு எவ்வளவு அதிகம் வேலை தருகிறோமோ, அவ்வளவு தூக்கம் தான் நமக்கு வரும். நாம் தற்போதெல்லாம் உடலுக்கு வேலையே தருவது இல்லை, எல்லாமே ஆட்டோமெட்டிக் மற்றும் ரிமோட் கண்ட்ரோலில் அடங்கிவிட்டதால், நமது தூக்கமும் அடங்கிவிட்டது.
தூக்கமின்மைக்கு மற்றுமொரு காரணம் சமூக வலைத்தளத்திலேயே தலைவைத்துப் படுத்திருப்பது, ஸ்மார்ட் ஃபோனின் தொடுதிரை கொஞ்சம் ஒலித்தாலும் கண்விழிக்கும் பழக்கம் கொண்டிருப்பது போன்றவை தான் இப்போது தலைவிரித்தாடும் தூக்கமின்மைக்கு காரணம். இவையை தவிர்த்து நீங்கள் சில செயல்கள் செய்தால், தூக்கம் கண்மூடித்தனமாக வரும். அதை தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்…
உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வது உடல்நல ஆரோக்கியத்திற்கு நல்லது. காலை மட்டுமல்லாது மாலை வேலைகளிலும் உடற்பயிற்சி செய்வது உடல்திறன் அதிகரிக்க உதவும். நீங்கள் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள சோர்வினை எல்லாம் போக்கி, நல்ல உறக்கம் தரும்.
ஜங்க் ஃபுட்
மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். ஜங்க் உணவுகள் சாப்பிடுவதால் வயிறு உப்புசம் அடைகிறது. இதனால் கூட இரவு நேரம் தூக்கம் வராது இருக்கலாம்.
ஃபேஸ் புக்
ஃபேஸ் புக் உபயோகப்படுத்த வேண்டாம் என யாரும் கூறவில்லை. நள்ளிரவு வரை அதிலேயே மூழ்கி இருந்துவிட்டு. பின் உறக்கம் வரவில்லை என கூறுவது முட்டாள்தனம். முடிந்த வரை கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். கண்களுக்கு ஓய்வளிக்காது இருப்பது கூட ஒருவகையில் தூக்கமின்மைக்கு காரணமே. எனவே, கூடிய சீக்கிரம் இரவில் ஃபேஸ் புக்கை மூடிவைத்துவிட்டு படுக்கைக்கு செல்வது நல்லது.
அளவான உணவு
இரவு வேளைகளில் உணவை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. அதே வேளை கடின உணவுகளை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் பாலும் பழங்களும் மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்வது சிறந்த உணவுப் பழக்கமாக இருக்கும். மற்றும் நல்ல தூக்கம் தரும்.
அதிகாலை நடைப்பயிற்சி
தினமும் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் அதிகாலை சூரிய ஒளி வரும் வேளையில் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. அதிகாலை சூரிய ஒளி நமது உடலில் படும் போது புத்துணர்ச்சி அளிக்கிறது, இது சோர்வினை போக்கும். சோர்வு இன்றி இருந்தாலே நல்ல உறக்கம் வரும்.