உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் ஒரு சில பழக்கங்களை வழக்கமாக மாற்றினால் எடையை வேகமாகக் குறைத்திட முடியும்.
காலையில் எக்காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்த்துவிட வேண்டாம். புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மதியம் வரை பசி இல்லா உணர்வைத் தரும். காலையில் புரதச்சத்து மிக்க உணவை சாப்பிடுவது உடல் எடைக் குறைய உதவியாக இருக்கும். காலையில் முட்டை, தயிர், லஸ்ஸி, பனீர், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
காலையில் எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான வெந்நீரை அருந்த வேண்டும். இது உடலின் வளர்சிதை மாற்றப் பணியைத் தூண்டி கொழுப்பை எரிக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள் அதிக தண்ணீர் அருந்துவது கொழுப்பை வேகமாக கரைக்க உதவும்.
காலையில் எழுந்ததும் இன்று எவ்வளவு வெயிட் இருக்கிறோம் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது சின்ன சின்ன எண்கள் கூட மிகப்பெரிய சாதனையாக தெரியும். அதுவே உடல் எடை குறைப்பு முயற்சியை கைவிடும் எண்ணத்தைத் தடுத்துவிடும்.
என்ன சாப்பிடுகிறோம், அதன் கலோரி என்ன என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி எடுத்துக்கொண்டோம், உடற்பயிற்சி மூலம் எவ்வளவு கலோரியை செலவழித்தோம் என்பதைத் தெரிந்துகொண்டால், எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம் என்ற தெளிவு பிறந்துவிடும்.
மன அழுத்தத்தைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். மன அழுத்தம் குறைய தியானம், யோகா போன்றவற்றை முயற்சி செய்யலாம். காலையில் சிறிது நேரம் யோகா செய்வது அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும்.
சரியான தூக்கம் கூட உடல் எடையைக் குறைக்க உதவும். இரவு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு தூங்கச் சென்றுவிட வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக எழுந்துவிட வேண்டும். அதிகாலையில் எழுந்திருப்பது எந்த பரபரப்பும் இன்றி உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்ய உதவியாக இருக்கும்.