நடிகர் விவேக் மரணம் குறித்து மத்திய சுகாதாரத்துறை விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
சினிமா துறை மட்டுமின்றி சமூக அக்கறையுள்ள மனிதராகவும் வலம்வந்த நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
சில நாட்களுக்கு முன்னே அவர் தடுப்பூசி செலுத்திய நிலையில், பல சர்ச்சைகள் எழுந்தன, தடுப்பூசிக்கும், விவேக் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரில், நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தும்போது விதிகள் பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விவேக் மரணம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்டதாக ஏற்கனவே அறிவித்திருந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.