25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8
மருத்துவ குறிப்பு

தொற்றினால் வரும் தொல்லை!

சிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னை வல்வோவஜினிட்டிஸ் (Vulvovaginitis). ”அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்னை” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. வல்வோவஜினிட்டிஸ் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

”வல்வோவஜினிட்டிஸ் என்கிற இந்தப் பிரச்னை, இள வயதுப் பெண்களையும், இனப்பெருக்க வயதுப் பெண்களையுமே அதிகம் தாக்குகிறது. பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என எந்த வகையானத் தொற்றின் மூலமும் இந்தப் பிரச்னை வரலாம்.

கெமிக்கல் கலந்த பெர்ஃப்யூம், அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டப் உபயோகிக்கிறவர்களுக்கும் இது சகஜம்.

தாம்பத்திய உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பைத் தவிர்க்க விந்தணுக் கொல்லி உபயோகிக்கிற பெண்களுக்கும் வரும். பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே இருப்பதால், சரியாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், கிருமித் தொற்று சுலபமாகப் பற்றும்.

மெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். மாதவிடாய் முற்றுப் பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பும் குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் தோன்றும்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதற்குக் காரணம் அவர்களது உடலில் நிகழ்கிற பி.ஹெச். அளவு மாற்றங்கள். கருத்தரிக்கும் நேரத்தில் விந்தணுக்களை அனுமதிக்க ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.

கருத்தரித்து விட்டால், அது அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் மேற்கொண்டு கருத்தரிப்பதோ, ஏற்கனவே தரித்த கரு பாதிக்கப்படாமலோ இருக்கும். இந்த நேரத்திலும் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மனித உடலில் வாய், மூக்கு என எல்லா உறுப்புகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றில் பலதும் இயற்கையாக நம் உடலைப் பாதுகாப்பவை. ஏதேனும் பிரச்னைக்காக ஆன்ட்டிபயாடிக் எடுக்கும் போது, அவை நல்ல பாக்டீரியாக்களை தாக்கி, அதன் விளைவாக தொற்று பரவும்.

தாம்பத்திய உறவுக்குப் பிறகு பரவும் கிருமித் தொற்றும் மிகவும் சகஜம். அதிக இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணிகிற பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்பு சில பெண்களுக்கு இப்பிரச்னை வரும். காரணம், சுய சுகாதாரமின்மை. டிரை டாய்லெட் உபயோகிக்கிற பலருக்கும் இந்தப் பிரச்னை மிக அதிகமாகத் தாக்கும். தண்ணீரைத் தவிர்த்து, டிஷ்யூ உபயோகிக்க வேண்டியிருப்பதால், முழுமையான சுத்தம் சாத்தியமாகாமல், அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபத்தில் உண்டாகும்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்னைபரவலாகக் காணப்படும். நடுத்தர வயதில் இந்தப் பிரச்னையை சந்திப்பவர்களுக்கு நீரிழிவின் அறிகுறியாகவோ, தைராய்டின் அறிகுறியாகவோ கூட இது இருக்கலாம்.

அறிகுறிகள்…

அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன் வெள்ளைப் போக்கும் இருக்கும். உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும். கிருமியின் தாக்குதல், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடும். சிலருக்கு நீர்த்த போக்கு இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்று இருக்கும். கிருமித் தொற்றின் காரணமாக கெட்ட வாடையும் இருக்கும். காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம்.

சோதனைகள்…

மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் வெள்ளைப் போக்கை சோதனைக்கு அனுப்பி, எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சருமப் பிரச்னை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் போன்றவை பலன் தரும்.

தவிர்க்க…

தளர்வான, காட்டன் உள்ளாடைகள் அணிய வேண்டும். டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்கவும். கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவையென்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.
8

Related posts

பெற்றோர் குழந்தைகள் முன்னால் செய்யக்கூடாதவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கொட்டை கரந்தையின் மருத்துவ குணங்கள்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் போது ஏற்படும் பயத்தினைப் போக்கும் வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்த ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

nathan

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட இந்த ஒரே முலிகை போதும்!இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

nathan