ஊடரங்கு உத்தரவால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் நேர்த்தியாக சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். தாடி வளர்த்தால் அதனை நேர்த்தியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் முகத்தின் அழகும், ஒட்டுமொத்த தோற்றமும் மாறிப்போய்விடும். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.
யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.
தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.