‘உடல் நலனில் கவனம் செலுத்துகிறீர்களா என்று கேட்டால் ‘நேரம் இல்லை’ என்பதுதான் இன்று பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. உடல், மனம், ஆரோக்கியம், உணவு, பயிற்சி, வேலை என ஒவ்வொரு விஷயத்தையும் சுறுசுறுப்பாகத் திட்டமிடுதல் ஒன்றுதான் தீர்வு.
அலுவலகம் செல்பவர்கள் உடல் மற்றும் மனம் அமைதி பெறுவதற்கான எளிய யோகா பயிற்சிகள் இங்கே…
தயாராகுதல்:
தரையில் படுத்து பாதங்கள் தரையில் பதித்து கால்களை மடித்த நிலையிலோ அல்லது ஒரு சிறிய உயரமான நிலையிலோ வசதியாய் வைத்துக்கொள்ளுங்கள். இரு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். அப்படியே சிறிது நேரம் இருங்கள். சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். கண்களை மூடி, மனதை அமைதிப்படுத்துங்கள். பாய் விரிப்பில் முதுகெலும்பு நன்கு படட்டும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மூச்சை மெதுவாக வெளியேவிட்டு, உள்ளிழுங்கள். இதை ஆறு முறை செய்யவும். பிறகு சில விநாடிகள் அமைதி. இப்போது கால்களை உயரத்தில் வைத்திருந்தால் அதை எடுத்துவிட்டு, கால்களை மடித்து இடைவெளிவிட்டு பாதங்களைத் தரையில் பதியுங்கள்.
ஒரு கை அசைவுகள்
மூச்சை உள்ளிழுத்தபடியே, ஒரு கையை மேலே தூக்கி, தலைக்கு மேல் கொண்டுசென்று தரையில் வைக்கவும். ஓரிரு விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி அந்தக் கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதேபோல் அடுத்த கையில் செய்யவும். இப்படி, இரு கைகளையும் ஆறு முறை செய்யலாம்.
இரு கைகளுடன் அசைவுகள்
இடது- வலது என்று மாற்றி மாற்றி செய்தவுடன் சில விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல் தூக்கி தரையில் தொடவும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதைச் செய்யும்போது, கைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். இதையும் ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். மூச்சு முழு உடலையும் தளர்த்தும். மனத்தின் எண்ண ஓட்டங்கள் குறையும். உடலில் என்ன நடக்கிறது என்பதைச் சற்று கூடுதலாக அறிய முடியும். முழு உடலும் ஆரோக்கியத்தை உணரும்.
ஜதார பரிவிரித்தியின் தழுவல்
கால்களுக்கு இடையில் இடைவெளிவிட்டுக் கொள்ளுங்கள். உள்ளங்கை தரையைத் தொட்டபடி, கைகளை உடலுக்கு அருகில் வையுங்கள். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு இரு கைகளையும் தோள் வரை, தரையோடு கொண்டுசெல்லவும். மூச்சை வெளியேவிட்டபடி இரு முட்டிகளையும் இடைவெளியுடன் இடப்பக்கம் முடிந்தவரை கொண்டுசெல்லவும். அதே நேரம் தலை தரையோடு ஒட்டியபடியே வலது பக்கம் போகும். ஓரிரு விநாடிகளுக்குப் பின் மூச்சை உள்ளிழுத்தபடி கால்களையும் தலையையும் நேராக்க வேண்டும். பிறகு மூச்சை வெளியேவிட்டபடி அடுத்த பக்கம் செய்யவும். இதுபோல ஆறு சுற்றுக்கள் செய்யுங்கள். பிறகு கால்களை நீட்டி, கைகளை உடலுக்கு அருகில் வைத்துக்கொண்டு சிறிது ஓய்வெடுங்கள்.
பலன்கள்: முதுகெலும்பு திருகப்படுவதால் உடலின் இறுக்கம் குறைந்து, முதுகெலும்பு பலமடையும். இடுப்பு, கழுத்துப் பகுதிகள் நன்கு தளர்வடையும். வயிறு தொடர்பான பிரச்னைகள் குறையும்.