பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதிலும் தொடை மற்றும் இடை பகுதியில் தான் அதிகப்படியான சதை ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே யோகாசனங்களை மேற்கொண்டால், தொடை மற்றும் இடை நன்கு சிக்கென்று இருக்கும். இதற்காக சில குறிப்பிட்ட யோகாசனங்கள் உள்ளன.அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
* உட்கடாசனா: (Utkatasana) இந்த பயிற்சியின் தொடக்கத்தில் கால்களில் வலி ஏற்படக்கூடும். இருப்பினும், தொடர்ந்து செய்து வந்தால், வலி நீங்கிவிடும்.
செய்முறை: பாதங்களை இணைந்து வைத்து கொண்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுக்கும் போது கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். மேலும், மூச்சை வெளியேற்றும் போது, முட்டிகளை மடக்கி, நாற்காலியில் உட்காரும் நிலையில் இருக்கவும். 30-60 நொடிகள் இதே நிலையில் இருக்கவும்.
பின்னர், பழைய நிலைக்கு வரவும். தொடக்க நிலையில் இருப்பவர்கள் 10 முறை செய்யலாம். பழகப் பழக அதனை அதிகரிக்கலாம். நாற்காலி நிலை நமக்கு பெரிது உதவியாக இருக்கும். ஏனெனில், அது தொடை தசைகளை வலுவடையச் செய்து, கூடுதலான கொழுப்பையும் குறைக்கச் செய்கின்றது.
* உத்தித ஹஸ்த பதாங்குஷ்தாசனா: (Utthita Hasta Padangusthasana) இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும், கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்க வேண்டும். இடது காலின் தரையில் ஊன்றி வலது காலை நேராக தூக்கவும். சில நிமிடங்கள் இந்த நிலையில் இருந்த பின்னர் கால்களை மாற்றி இன்னொரு காலில் செய்யவும். இந்த ஆசனங்கள் இடையையும், தொடையையும் எளிதாக குறைக்கச் செய்யும்.
* டீப் ஸ்குவாட்ஸ் (Deep squats) இந்த யோகா தொடைகளில் மாயங்கள் செய்யும். அதற்கு கால்களை 12 இன்ச் அளவு இடைவெளி விட்டு நிற்கவும். கைககளை முன்னால் கொண்டு வந்து, தரையை பார்க்கும் படி வைக்கவும். அதே நிலையில், மூச்சை உள்ளிழுத்து, உட்காரும் நிலைக்கு வரவும். மேலும் உங்களது கால்கள் 90 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை வெளியேற்றும் போது, பழைய நிலைக்கு உடனே திரும்பவும். இவ்வாறு 5 முறை செய்யவும்.
* விரபத்ராசனா I (Virabhadrasana I) கால்களை அகற்றி வைத்து நேராக நிற்கவும். இடது காலை சிறிது நகர்த்தி, இரண்டு கால்களுக்கான இடைவெளி 3 அல்லது 4 அடிகள் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இடது காலை நேராக வைத்துக் கொண்டு, இடது புறமாக முழுவதுமாக சுற்றவும். வலது கால் லேசாக சுற்றும் படி பார்த்துக் கொள்ளவும்.
கால்கள் அதே நிலையில் இருக்கும் படி, உடலை முழுவதுமாக இடது புறத்திற்கு சுழற்றவும். இடது கால் முட்டியை மடக்கி, உடல் முழுவதும் இடது புறமாக திருப்பி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, வணக்கம்சொல்வது போல் வைத்துக் கொள்ளவும். இந்த நிலை நமது தாங்குதிறனை உயர்த்தி, படைவீரன் போல் இருக்கச் செய்யும். மேலும், நமது கால்களையும் வலுவடையச் செய்யும்.
* சேதுபந்தாசனா (SetuBandhasana) தரையில் படுத்துக் கொண்டு, கால்களை அகலமாக விரித்து, முட்டியை மடக்கி பாதங்கள் தரையில் படும்படி இருக்கவும். பின் கைகளை அருகில் வைத்து, உள்ளங்கைகள் தரையில் படும்படி வைக்கவும். இப்பொழுது, இடுப்பை தரையில் இருந்து மேலாக தூக்கவும். கைகளும் கால்களும் அதே நிலையில் இருக்க வேண்டும்.
இதே நிலையில், கைககளை தலைக்கு மேல் உயர்த்தவும். இந்த ஆசனத்தில் சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால், உங்கள் கால்களில் ஒன்றை மேலே தூக்கவும். அப்படியே சிறிது நேரம் வைத்த பின்னர் இன்னொரு காலால் செய்யவும்.