ஒரு பெண்ணிற்கு பிரசவம் மறு ஜென்மம் ஆகும். இந்த பிரசவத்தின் போது பெண்கள் தாங்க முடியாத கடுமையான வலியை உணர்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய காலத்தில் சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தைகள் அதிகம் பிறக்கிறார்கள். இதற்கு பெண்களின் இன்றைய பெண்களின் உடலில் போதிய தெம்பு இல்லாததை ஓர் காரணமாக கூறலாம்.
உண்மையில் சிசேரியன் பிரசவத்தை விட, சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டால், தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பு இன்னும் அதிகமாக இருக்கும். எனவே ஒவ்வொரு பெண்ணும் சிசேரியனை விட சுகப்பிரசவத்தின் வழியே குழந்தைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது.
இருப்பினும், இவை அனைத்தும் நம் மருத்துவர்களின் கையிலும் தான் உள்ளது. இங்கு சுகப்பிரசவம் எளிதில் நடைப்பெறுவதற்கு உதவும் சில யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பத்த கோனாசனம்
பத்த கோனாசனம் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஓர் சிறப்பான யோகா நிலையாகும். கர்ப்பிணிப் பெண்கள் படத்தில் காட்டப்பட்டவாறான யோகாவை செய்து வருவதால், இடுப்பு எலும்பு ரிலாக்ஸ் ஆவதோடு, விரிவடையவும் செய்யும். இதனால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
மலாசனம்
இந்த ஆசனமானது தினந்தோறும் காலையில் எழுந்ததும் நம்மை அறியாமலேயே அனைவரும் செய்து வரும் ஓர் ஆசனமாகும். இந்த ஆசனத்தை கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் செய்து வந்தால், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆசனத்தின் போது உடலின் கீழ் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால், கோர் தசைகள் வலிமையடையும்.
வஜ்ராசனம்
இந்த ஆசனத்தை கர்ப்பிணிகள் செய்தால் உடலின் கீழ் பகுதி நன்கு வளையும் தன்மையை அடைவதோடு, உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தொடையில் உள்ள தசைகள் வலுப் பெறும். மேலும் இந்த ஆசனம் கர்ப்ப காலத்தில் செரிமான பிரச்சனை, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
சுகாசனம்
அமர்ந்து செய்யும் ஆசனங்களிலேயே மிகவும் எளிமையான ஓர் ஆசனம் தான் சுகாசனம். இந்த ஆசனம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றதும் கூட. இதனால் உடலும் மனமும் ரிலாக்ஸ் அடையும். இந்த ஆசனம் செய்யும் போது மேற்கொள்ளும் நிலையினால், பிரசவத்தின் போது, முதுகு பகுதி வலிமையுடன் இருந்து, எளிதில் பிரசவிக்க உதவும்.
உட்கட்டாசனம்
படத்தில் காட்டப்பட்டவாறான இந்த உட்கட்டாசனம் அடி முதுகு, தண்டுவடம், இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் உள்ள தசைகளை வலிமையடையச் செய்யும். இந்த ஆசனத்தை கர்ப்பிணிகள் செய்து வந்தால், பிரசவத்தின் போது ஏற்படும் வலியைத் தாங்கிக் கொள்ள செய்து, எளிதில் சுகப்பிரசவம் நடைபெற உதவும்.
குறிப்பு
ஆசனம் என்ன தான் உடலுக்கு மிகவும் நல்லதாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் எந்த ஒரு செயலை மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.