உங்களுக்கு கருவளையங்கள் உள்ளதா? முக அழகைக் கெடுக்கும் கருவளையங்களை மறைக்க பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை பல அடுக்கு மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைக்க முடியுமே தவிர, நிரந்தரமாக போக்கிவிடாது.
ஒருவருக்கு கருவளையங்கள் மன அழுத்தம், களைப்பு, வயது, தூக்கமின்மை, அதிகமாக வெயிலில் சுற்றுவது மற்றும் உடல் வறட்சி போன்ற பல காரணங்கள் வரலாம். இத்தகைய கருவளையங்களை சில இயற்கை வழிகளின் மூலம் எதிர்த்துப் போராடி போக்க முடியும்.
அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சற்றும் சோம்பேறித்தனப் படாமல், ஒருசில பொருட்களால் சருமத்திற்கு தினமும் பராமரிப்பு கொடுக்க வேண்டும். கீழே கருவளையங்களை எதிர்த்துப் போராடி மறைக்க உதவும் சில எளிமையான நேச்சுரல் ஐ மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, போதுமான தூக்கம் மற்றும் போதுமான நீரையும் குடிக்க வேண்டும்.
காபி மாஸ்க்
காபியில் உள்ள பண்புகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. இத்தகைய காபித் தூளை கருவளையத்தைப் போக்க பயன்படுத்தலாம். அதற்கு ஒரு பௌலில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சீக்கிரம் கருவளையம் மறையும்.
உருளைக்கிழங்கு புதினா மாஸ்க்
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது கருமையான திட்டுக்களை எதிர்த்துப் போராட உதவும். புதினாவில் உள்ள குளிர்ச்சிப் பண்புகள், கருவளையங்கள் மற்றும் கண்களின் கீழ் வீங்கியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கு மற்றும் புதினாவை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து கண்களை மூடி கண்களின் மீது 10 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை பல்வேறு அழகு நன்மைகளை வழங்கக்கூடியது. அதற்கு கற்றாழை செடியில் உள்ள ஜெல்லை எடுத்து, கண்களைச் சுற்றி தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமானால், கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர்
பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் அழகு பொருள் தான் ரோஸ் வாட்டர். இதில் ஏராளமான அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. ரோஸ் வாட்டரை தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும். அதற்கு பஞ்சுருண்டையை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மீது 15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையம் விரைவில் நீங்கும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கும். இது கருவளையங்களை மறைய செய்வதோடு, கண்களின் கீழ் உள்ள சுருக்கங்களையும் குறைக்கும். அதற்கு பாதாம் எண்ணெயில் சிறிது தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் காணாமல் போகும்.
பால் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க்
4 டேபிள் ஸ்பூன் பாலுடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்பு அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்குவதோடு, கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
டீ பேக்
க்ரீன் டீ பேக், ப்ளாக் டீ பேக் எதுவானாலும், கருவளையங்களைப் போக்கும் திறன் கொண்டவை. அதற்கு டீ போட பயன்படுத்தப்பட்ட டீ பேக்குகளை ஃப்ரிட்ஜில் 5-10 நிமிடம் வைத்து எடுத்து, பின் அதை கண்களின் மீது 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்தது. அத்தகைய வெள்ளரிக்காயை துருவி ஃப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்து எடுக்கவும். பின் அதை கண்களைச் சுற்றி பரப்பி, 30 நிமிடம் ஊற விட வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
அன்னாசி மாஸ்க்
கருவளையத்தைப் போக்கும் மற்றொரு நேச்சுரல் மாஸ்க் தான் அன்னாசி மாஸ்க். அதற்கு அன்னாசி ஜூஸில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரம் தினமும் செய்து வந்தால், கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.