முகம் பொலிவுடனும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசை. ஆனால், அதற்காக முகத்தில் கறைகளோ கரும்புள்ளிகளோ இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இவற்றை சரிசெய்ய பல எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு எளிய முறையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உருளைக்கிழங்கை (Potato) பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்து விடலாம். ஆம்!! உருளைக்கிழங்கின் சாறு சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கு சாறு செய்முறை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
முகப்பரு (Pimples) மற்றும் பருக்கள் காரணமாக, சருமத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள் ஏற்படுகின்றன. தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க சமையலறையில் கிடைக்கும் பல விஷயங்கள் நமக்கு கை கொடுக்கும். இவற்றில் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
உருளைக்கிழங்கு சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது
– முதலில், உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து கொள்ளவும்.
– இந்த கலவையை பஞ்சால் உங்கள் முகத்தில் தடவவும்.
– சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
– அதன் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
– இப்படி வாரத்திற்கு 3 முறை முகத்தில் தடவலாம்.
உருளைக்கிழங்கு சாறு ஃபேஸ் பேக்
– உருளைக்கிழங்கு சாறு கொண்டு நீங்கள் ஃபேஸ் பேக்கையும் தயார் செய்யலாம்.
– இதை தயாரிக்க உங்களுக்கு முல்தானி மிட்டி தேவைப்படும்.
– முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு சாறு கொண்டு ஒரு கலவையைத் தயாரிக்கவும்
– இப்போது இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவவும். அது காய்ந்து போகும் வரை அப்படியே விட்டு விடவும்.
– உங்கள் முகத்தில் இந்த கலவை காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
– இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்
மஞ்சளுடன் (Turmeric) உருளைக்கிழங்கு சாற்றை சேர்த்து நீங்கள் முக பொலிவுக்கு பயன்படுத்தலாம். ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு சாறை சேர்க்கவும். இதை முகத்தில் தடவி அப்படியே சில நிமிடங்கள் இருக்க விடவும். பின்னர் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். இப்படி செய்வதன் மூலம், முகத்தின் கரும்புள்ளிகள் அகற்றப்பட்டு, உங்கள் முகம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
குறிப்பு- இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.